கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு போலீசிடம் பாதுகாப்பு கோரிய உதய்பூர் தையல்காரர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு, உதய்பூர் தையல்காரர் போலீசிடம் பாதுகாப்பு கோரியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2022-06-29 13:04 GMT

உதய்ப்பூர்,

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆதரித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ராஜஸ்தானை சேர்ந்த தையல் கடைக்காரர் ஒருவர், தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவிலும், குறிப்பாக ராஜஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு, கொலை செய்யப்பட்ட உதய்பூர் தையல்காரர் போலீசிடம் பாதுகாப்பு கோரியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கன்னையா லால் என்ற அந்த தையல் கடைக்காரர் கொலை செய்யப்படும் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவத்தை அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

நுபுர் சர்மாவை ஆதரித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதற்காக ஜூன் 11ஆம் தேதி, கன்ஹையா லால் போலீசால் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர், ஒரு நாள் கழித்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. உடனே ஜூன் 15 அன்று, அவர் கொலை மிரட்டல் குறித்தும், அக்கம்பக்கத்தினரின் மிரட்டல் குறித்தும் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது,

"எனது மகன் என்னுடைய மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளப் பதிவை தவறுதலாக அனுப்பிவிட்டான். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, 2 பேர் என்னிடம் வந்து எனது மொபைல் போனை பறிக்க முயன்றனர்.

மூன்று நாட்களாக, அந்த 2 பேர் எனது கடையின் அருகே பதுங்கியிருந்து, கடையை திறக்க விடாமல் தடுத்தனர். தயவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது கடையை திறக்க உதவுங்கள், என்னை பாதுகாக்கவும்."

இவ்வாறு அவர் போலீஸ் புகாரில் தெரிவித்திருந்தார்.

அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், தையல்காரரையும், அவரை மிரட்டியதாக குற்றம் சாட்டிய அக்கம்பக்கத்தினரையும், மேலும், இரு பிரிவு சமூகங்களின் தலைவர்களையும் அழைத்துப் பிரச்சினையை தீர்க்க முயன்றனர்.

அவரது மனைவி யசோதா கூறியதாவது:- "அப்போது கன்னையா லால், 'பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், இனி போலீஸ் நடவடிக்கை தேவையில்லை' என்றும் எழுத்துப்பூர்வமாக அளித்தார்.

ஆனால் அவர் இன்னும் பயந்தார். ஒரு வாரமாக அவர் கடைக்கு செல்லவில்லை. நேற்று முதல் முறையாக சென்றார்" என்று கூறினார்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஹவா சிங் குமாரியா கூறுகையில்:- "அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டது. அவரை தாக்கியவர்கள், அவரை அச்சுறுத்தியவர்கள் அல்ல. வேறு நபர்கள்" என்று கூறினார்.

கோஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தாரி ஆகிய இருவரால் கன்ஹையா லால் அவரது கடையில் வைத்து கொல்லப்பட்டார். அதன்பின்னர், இந்த படுகொலையை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்ட தவாத்-இ-இஸ்லாமி என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முகத்தை ஹெல்மெட் அணிந்து மறைத்துக் கொண்டு, பைக்கில் தப்பிச் செல்ல முயன்ற இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்