விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம்; இரு மடங்கு உயர்வு
விநாயகர் சதுர்த்தியையொட்டி தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.;
பெங்களூரு:
விநாயகர் சதுர்த்தியையொட்டி தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வேலை மற்றும் படிப்புக்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த மக்கள் தங்கி இருந்து வருகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது.
இதன்காரணமாக பெங்களூருவில் வசிக்கும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மக்கள் கூட்டம்
3 நாட்கள் விடுமுறை காரணமாக நேற்று முன்தினமே மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இதனால் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதே நேரத்தில் அரசு பஸ்களிலும் ஏறக்குறைய டிக்கெட்டுகள் விற்ற தீர்ந்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் மக்கள் தனியார் ஆம்னி பஸ்களை நோக்கி செல்கிறார்கள். இதனால் தனியார் ஆம்னி பஸ்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. நேற்றும் சொந்த ஊருக்கு செல்ல பெங்களூருவில் சாந்திநகர், சாட்டிலைட், மடிவாளா, கெங்கேரி உள்ளிட்ட பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அதேபோல், பெங்களூரு சிட்டி, யஸ்வந்தபுரம், சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
இரு மடங்கு உயர்வு
மக்களின் கூட்டம் அதிகரித்ததால் தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளது. இது பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. விமான கட்டணம் அளவுக்கு தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து சிவமொக்கா, மங்களூரு, பெலகாவி, விஜயாப்புரா உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், சென்னை, ஐதராபாத் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் இருந்து சிவமொக்காவுக்கு சாதாரண நாட்களில் தனியார் ஆம்னி பஸ்களில் ரூ.500 முதல் ரூ.600 வரை டிக்கெட் கட்டணம் ஆகும். தற்போது சிவமொக்காவுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உயர்ந்துள்ளது.
பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு சாதாரண நாட்களில் ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை கட்டணம் ஆகும். தற்போது பெலகாவிக்கு ரூ.3,200 முதல் ரூ.3,500 வரை உயர்ந்துள்ளது.
இதேபோல், தமிழ்நாடு சென்னை, கோவை, நெல்லை மற்றும் ஐதராபாத் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருந்தது. ரெயில் மற்றும் அரசு பஸ்களில் இடம் கிடைக்காததால் மக்கள் வேறு வழியின்றி அதிக கட்டணம் கொடுத்து தனியார் ஆம்னி பஸ்களில் பயணம் செய்தனர்.
கடிவாளம் போட வேண்டும்
பண்டிகை காலங்களில் தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கொள்ளை அடிப்பதாகவும், இதற்கு கடிவாளம் போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.