பெங்களூருவில் 26½ கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடி திறந்த காரில் பிரமாண்ட ஊர்வலம்
பெங்களூருவில் பிரதமர் மோடி 26½ கிலோ மீட்டர் தூரம் பிரமாண்ட ஊர்வலம் நடத்தி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் திரண்டு வந்து பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பா.ஜனதா தொண்டர்கள்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் வருகிறது. தேர்தல் களத்தில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இந்த தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. பிரதமர் மோடி கடந்த மாதம்(ஏப்ரல்) 29-ந் தேதி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவர் இதுவரை 6 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று 6-வது நாளாக பிரசாரம் நடத்தினார். பிரதமர் மோடி பெங்களூருவில் 26½ கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலம் நடத்தினார்.
பெங்களூருவின் தெற்கு தொகுதியில் அமைந்துள்ள ஆர்.பி.ஐ. லே-அவுட்டில் உள்ள சோமேஸ்வரா பவனில் இருந்து காலை 10.30 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, குண்டு துளைக்காத திறந்தவெளி காரில் அவர் நின்றபடி சாலையின் இருபுறத்திலும் குவிந்திருந்த பா.ஜனதா தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார். அந்த கார் காவி நிறத்தில் இருந்தது. அதில் மோடியின் புகைப்படம் மற்றும் பா.ஜனதாவின் சின்னம் அச்சிடப்பட்டு இருந்தது.
பூக்களை தூவினர்
ஜே.பி.நகர், ஜெயநகர் சவுத் என்ட் சர்க்கிள், மாதவராவ் சர்க்கிள், ராமகிருஷ்ணா ஆசிரமம், உமா தியேட்டர் சர்க்கிள், மைசூரு சிக்னல், டோல்கேட் சிக்னல், கோவிந்தராஜ்நகர், மாகடி ரோடு சந்திப்பு, சங்கர் மட சர்க்கிள், மல்லேசுவரம் சர்க்கிள், சம்பிகே ரோடு 18-வது கிராஸ் சந்திப்பு வழியாக சாங்கி டாங்கி ஏரிக்கரையில் மதியம் 1.30 மணியளவில் ஊர்வலம் நிறைவடைந்தது. இந்த ஊர்வலம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. சாலையில் இருபுறமும் குவிந்திருந்த பா.ஜனதா தொண்டர்கள் மோடியின் மீது பூக்களை தூவினர். இதனால் அவரது கார் பூக்களால் மூடப்பட்டு இருந்தது.
தொண்டர்கள் 'ஜெய் பஜ்ரங்பலி' என்றும், 'பாரத் மாதாகி ஜெய்' என்றும் முழக்கமிட்டனர். பிரதமர் மோடி தனது வழக்கமான உடையுடன் தலையில் காவி நிற தொப்பி அணிந்திருந்தார். காரில் பிரதமர் மோடியுடன் எம்.பி.க்கள் தேஜஸ்வி சூர்யா, பி.சி.மோகன் ஆகியோர் இருந்தனர். மேலும் மோடியை சுற்றிலும் அவரது பாதுகாப்பு படையினர் நின்றிருந்தனர். அவரின் காரை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்திய நிலையில் நடந்து வந்தனர். பிரதமரின் காரை பின்தொடர்ந்து போலீசாரின் பாதுகாப்பு வாகனங்கள், டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை உள்ளடக்கிய சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் அணிவகுத்து வந்தன.
போலீசார் பாதுகாப்பு
மோடியின் ஊர்வலத்தையொட்டி அவர் பயணித்த 35 சாலைகள் நேற்று காலை முதலே மூடப்பட்டது. அந்த சாலைகளில் வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த சாலைகளின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு, அதன் மீது காவி நிற கொடி கட்டப்பட்டு இருந்தது. அந்த இரும்பு தடுப்புகளுக்கு அப்பால் தொண்டர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
அசம்பாவித சம்பவங்களை தடுக்க சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த ஊர்வலம் நடைபெற்ற சாலையில் கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கட்டிடத்தின் மீதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடங்கள் மீது நிற்கவோ, கட்டிடங்களின் கதவை திறக்கவோ, உள்ளே செல்லவோ போலீசார் தடை செய்திருந்தனர்.
நெரிசல் உண்டானது
ஊர்வலத்தை காண பா.ஜனதா தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிக எண்ணிக்கையில் குவிந்திருந்தனர். இதில் குறிப்பாக சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்களும் சாலையின் இருபுறமும் திரண்டு வந்து கால்கடுக்க காத்திருந்து பிரதமர் மோடியை பார்த்து ரசித்தனர்.
பிரதமர் மோடியை பார்த்ததும் தொண்டர்கள் 'மோடி, மோடி' என்று முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர். மோடியின் ஊர்வலத்தில் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. சில இடங்களில் அவசரமாக செல்ல வேண்டிய நபர்கள் போலீசார் மீது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.
இன்று 2-வது நாள் ஊர்வலம்
பிரதமர் மோடியின் இந்த ஊர்வலம் சுமார் 12 தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே பெங்களூருவில் பிரதமர் மோடி 5 தொகுதிகளில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலம் நடத்தப்பட்டது. அதாவது எலகங்கா, யஷ்வந்தபுரம், ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் மகாலட்சுமி லே-அவுட் ஆகிய 4 தொகுதிகளை உள்ளடக்கி அவர் ஊர்வலம் மேற்கொண்டார். இதுவரை 16 தொகுதிகளில் அவர் பிரசாரம் நடத்தியுள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் 2-வது நாளாக ஊர்வலம் மேற்கொள்கிறார். நியூ திப்பசந்திராவில் இருந்து பிரிகேட் ரோடு வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலம் காலை 10 மணிக்கு தொடங்கி காலை 11.30 மணிக்கு நிறைவடைய உள்ளது. இந்த ஊர்வலம் சி.வி.ராமன்நகர் உள்ளிட்ட 6 தொகுதிகள் வழியாக நடைபெற உள்ளது. பெங்களூருவில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன.
அதிக இடங்கள்
அதில் பிரதமர் மோடி 22 தொகுதிகளில் பிரசாரம் நடத்தி முடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் இந்த நீண்ட தூர ஊர்வலம் பா.ஜனதாவுக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதனால் பெங்களூருவில் அக்கட்சி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மோடியின் ஊர்வலம் எந்த அளவுக்கு பா.ஜனதாவுக்கு பலத்தை கொடுத்துள்ளது என்பது தேர்தல் முடிவு வெளியாகும் போது தெரியவரும்.