தாஜ்மகாலில் 'காணாமல் போன' விலை மதிப்பில்லா கற்கள்: ஆர்.டி.ஐ.யில் அதிர்ச்சி தகவல்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலில் ஒவ்வோர் ஆண்டும் விலை மதிப்பில்லா கற்கள் ‘காணாமல் போகக்கூடிய’ அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.;
ஆக்ரா,
உலக அதிசயங்களில் ஒன்றாக உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் தாஜ் மகால் இருந்து வருகிறது. முகலாய பேரரசர்களில் ஒருவரான ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜ் மறைவையடுத்து, நினைவுகூரும் வகையில் அதனை கட்டியுள்ளார்.
அதனால் நினைவு சின்னங்களில் ஒன்றாகவும் அது திகழ்கிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும், தாஜ் மகாலில் உலகின் அதிக விலை உயர்ந்த பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
இதற்காக திபெத் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அவை கொண்டு வரப்பட்டு தாஜ் மகால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கற்களில் வெள்ளை நிற கற்கள் அதிக விலை உயர்ந்தவை.
இந்த கற்களின் சூரிய எதிரொளிப்பு தன்மையால், காலை, மாலை மற்றும் இரவு என 3 வேளைகளிலும் வெவ்வேறு நிறங்களை பிரதிபலிக்க கூடியது. இதனால், காலையில் பிங்க் நிறத்திலும், மாலையில் பால் நிறத்திலும் மாறும் தாஜ் மகால், இரவில் நிலா ஒளியில் தங்க நிறத்திலும் காட்சியளிக்கும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு கிடைத்த பதிலில், தாஜ்மகாலின் பொலிவை கூட்டும் விலை மதிப்பில்லா கற்கள் ஒவ்வோர் ஆண்டும் மறைந்து வருகின்றன என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த முகலாய காலத்து நினைவு சின்னங்களில் ஒன்றான தாஜ் மகாலை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள இந்திய தொல்லியல் துறையானது, காணாமல் போக கூடிய கற்களுக்கு பதிலாக புதிய கற்களை பதித்து வரும் பணியை செய்து வருகிறது.
இதற்காக கடந்த 7 ஆண்டுகளில் இதுவரை ரூ.2.5 கோடி அளவுக்கு நிதியை செலவிட்டு பல பகுதிகளில் கற்களை நிறுவி வருகிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.
இதன்படி, ஷாஜகான் மற்றும் மும்தாஜ் கல்லறை, ராயல் கேட் பகுதி, தாஜ் மகாலின் மாடம் போன்ற முக்கிய பகுதியில் இருந்தும் கற்கள் காணாமல் போயுள்ளன என தெரிய வந்து உள்ளது.