ஜனாதிபதி தேர்தல்; எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் யார்? சோனியா காந்தியுடன் சரத்பவார் நாளை சந்திப்பு

ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய, நாளை சோனியா காந்தியை சரத்பவார் சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-11 14:03 GMT

மும்பை,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை அறிவித்துள்ளது.அதன்படி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. ஜூன் 29-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 5 லட்சத்து 26 ஆயிரத்து 420 வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 892 வாக்குகள் உள்ளன. எந்த அணியையும் சேராத மாநில கட்சிகளுக்கு 2 லட்சத்து 92 ஆயிரத்து 894 வாக்குகள் உள்ளன. பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு சுமார் 13 ஆயிரம் வாக்குகள் குறைவதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகளும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் கட்சியை சாராத ஒருவரை வேட்பாளராக களம் இறக்க சோனியா முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகளை பாஜக மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தரப்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்க்கே ஆலோசனை நடத்தினார்.

நேற்று மாநில ஜனாதிபதி தேர்தல் அட்டவணை வெளியானதும் காங்கிரஸ் தலைவர் சோனியா கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையை தொடங்கினார்.நேற்று இரவு அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

இதில் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து, பொதுவேட்பாளராக ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் சார்பில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய, சரத்பவார், நாளை சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை புனேவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை சரத் பவார் உறுதிபடுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்