இன்றும், நாளையும் ஜனாதிபதி முர்மு அருணாசலபிரதேசத்தில் சுற்றுப்பயணம்
இன்றும், நாளையும் ஜனாதிபதி முர்மு அருணாசலபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இடா நகர்,
ஜனாதிபதி திரவுபதி முர்மு, தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக வருகை தந்து கடந்த 2 நாட்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்தார். நேற்று பிற்பகலில் டெல்லி சென்றடைந்தார்.
இந்த நிலையில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் 2 நாள் பயணமாக அருணாசலபிரதேசத்திற்கு செல்கிறார். ஜனாதிபதியான பின்பு அவர் முதல்முறையாக அங்கு செல்ல உள்ளார். இதற்கு முன்பு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு சேகரிப்பதற்காக அங்கு சென்றிருந்தார்.
அருணாசலபிரதேசம் மாநிலம் உதயமாகிய 37-வது ஆண்டு தின கொண்டாட்டம் இன்று நடைபெற உள்ளது. அதில் சிறப்பு அழைப்பாளராக திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இதையொட்டிய சிறப்பு சட்டசபை கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. அதிலும் அவர் பங்கேற்று புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.