பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் சாவு

மங்களூரு அருகே பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண், டாக்டர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-26 21:38 GMT

மங்களூரு:

மங்களூரு அருகே பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண், டாக்டர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா குக்குஜே கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி ஷில்பா ஆச்சார்யா (வயது 36). நிறைமாத கர்ப்பிணியான இவரை கடந்த 2-ந் தேதி குடும்பத்தினர் மங்களூரு குந்திக்கான பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரசவம் பார்க்கும் டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை.இதனால் சாதாரண டாக்டர்கள், ஷில்பாவிற்கு பிரசவம் பார்த்தனர். அப்போது சுகபிரசவம் ஆகவில்லை. இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்தனர். இதையடுத்து ஷில்பாவிற்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஷில்பாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. குறிப்பாக அதிகளவு காய்ச்சல் மற்றும் உடல் பலவீனத்தால் ஷில்பா சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து அவரை கோமாநிலையில் இருந்து மீட்டெடுப்பதற்காக டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் டாக்டர்கள் ஷில்பா உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே கத்ரி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரை ஏற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை அறிந்த ஷில்பாவின் குடும்பத்தினர், நேற்று மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

குடும்பத்தினர் போராட்டம்

அதாவது குடும்பத்தினர் ஷில்பாவின் உடலை எடுக்கவிடாமல் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தினர். இதனால் மருத்துவமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், ஷில்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்