கர்நாடகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை; மந்திரி சுனில்குமார் தகவல்
கர்நாடகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மேல்-சபையில் மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மேல்-சபையில் மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் கூறியுள்ளார்.
மின் கட்டணம்
கர்நாடக சட்டசபையின் முதலாவது மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளன்று நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து சட்டசபைக்கு சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை நேற்று மீண்டும் விதான சவுதாவில் கூடியது. நேற்று காலை சபை கூடியதும் கேள்வி நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல் மேல்-சபையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் நாகராஜ் யாதவ் கேட்ட கேள்விக்கு மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் பதிலளிக்கையில், 'கர்நாடகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை. அத்தகைய யோசனையும் அரசுக்கு இல்லை. எக்காரணம் கொண்டும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தாது' என்றார்.
கடும் நெருக்கடி
முன்னதாக பேசிய உறுப்பினர் நாகராஜ் யாதவ், 'கர்நாடகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் ஏற்கனவே கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். எனவே மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் அரசுக்கு இருந்தால், கைவிட வேண்டும்' என்றார்.