வார்டு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஆட்சேபனை மனுக்கள் குவிந்தன: பெங்களூரு மாநகராட்சி தேர்தல் ஒத்திவைப்பு?

வார்டுகள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஆயிரக்கணக்கான ஆட்சேபனைமனுகள் குவிந்து இருப்பதால் பெங்களூரு மாநகராட்சி தேர்தலை ஒத்திவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-08-09 17:21 GMT

பெங்களூரு: வார்டுகள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஆயிரக்கணக்கான ஆட்சேபனைமனுகள் குவிந்து இருப்பதால் பெங்களூரு மாநகராட்சி தேர்தலை ஒத்திவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

வார்டுகள் எண்ணிக்கை

பெங்களூரு மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை 243 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வார்டுகளுக்கான இட ஒதுக்கீட்டு பட்டியல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரசு வெளியிட்டது. இதுகுறித்து ஆட்சேபனை தெரிவிக்க ஒரு வாரம் காலஅவகாசம் வழங்கப்பட்டது. அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களாக உள்ள தொகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகள் பெரும்பாலானவை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

மேலும் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற வாய்ப்புள்ள நிர்வாகிகளின் வார்டுகளும் பெண்களுக்கும், பிற சமூகத்திற்கும் ஒதுக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. ஆளும் பா.ஜனதா அரசு காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கும் நோக்கத்தில் இட ஒதுக்கீட்டு பட்டியலை தயாரித்துள்ளதாக கூறி அக்கட்சியினர் விதான சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் வார்டு இட ஒதுக்கீட்டு பட்டியலுக்கு ஆளும் பா.ஜனதா நிர்வாகிகளே அதிருப்தி தெரிவித்தனர்.

மாநகராட்சி தேர்தல்

இந்த நிலையில் மாநில அரசு வெளியிட்டுள்ள வார்டு இட ஒதுக்கீட்டு பட்டியலுக்கு ஆட்சேபனை தெரிவிக்க நேற்று கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில் வார்டு இட ஒதுக்கீட்டு பட்டியலுக்கு ஆயிரக்கணக்கான ஆட்சேபனை மனுகள் வந்துள்ளன. அந்த ஆட்சேபனைமனுகளை முன்வைத்து சுப்ரீம் கோர்ட்டில் மாநகராட்சி தேர்தலை ஒத்திவைக்குமாறு கோர கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு மாநகராட்சி தேர்தல் நடத்த கூடாது என்ற மனநிலையில் ஆளும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் மாநகராட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிபதிகள் என்ன சொல்கிறார்கள் என்பது தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்