டெல்லியில் சாலையில் நமாஸ் செய்தவர்களை எட்டி உதைத்த காவலர் சஸ்பெண்ட்
நமாஸ் செய்தவர்களை எட்டி உதைத்த சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள இந்தர்லோக் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இன்று மதியம் 2 மணிக்கு அஸர் தொழுகையை மேற்கொள்வதற்காக இஸ்லாமியர்கள் சிலர் சாலையில் நமாஸ் செய்யத் தொடங்கினர். அப்போது அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை காலால் எட்டி உதைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நமாஸ் செய்தவர்களை எட்டி உதைத்த காவலர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து டெல்லி வடக்கு டி.சி.பி. கே.மீனா கூறுகையில், "இன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோவில் காணப்படும் காவலர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.