பணியில் அலட்சியமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
பணியில் அலட்சியமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பெங்களூரு:
பெங்களூரு அசோக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெண்களை வைத்து விபசாரம் நடந்தது. இதுகுறித்து அந்த பகுதியினர் பலரும் அசோக்நகர் போலீசில் புகார் அளித்தனர். அப்போது அசோக்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டராக ஸ்ரீகாந்த் என்பவர் இருந்தார். இதுகுறித்து புகார்கள் வந்தும் அவர் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று சோதனை ஏதும் நடத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதற்காக அவர் லஞ்சம் பெற்றதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே ஓட்டலில் விபசாரம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விபசாரம் நடந்தது தெரிந்தது. இதையடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் இதுதொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் விபசாரம் நடப்பது குறித்து அறிந்தும், அசோக்நகர் இன்ஸ்பெக்டர் சோதனைக்கு செல்லாமல், பணியில் அலட்சியமாக இருந்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்தை பணியிடை நீக்கம் செய்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது உத்தரவில், 'விபசாரத்தை தடுக்க தவறியதுடன், பணியின்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் அலட்சியமாக இருந்துள்ளார். எனவே அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடுகிறேன்' என்று கூறி இருந்தார்.