பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு: பாதிரியார் மீதான போக்சோ வழக்கு ரத்து

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பாதிரியார் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-06-15 16:34 GMT

பெங்களூரு: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பாதிரியார் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

பெங்களூருவில் உள்ள ஒரு தேவாலயத்தின் பாதிரியாராக இருந்து வருபவர் பிரசன்ன குமார் சாமுவேல். இந்த நிலையில் தேவாலய பள்ளியில் படித்து வரும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூரு கப்பன் பார்க் போலீசார் பாதிரியார் பிரசன்னகுமார் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிரசன்ன குமாரின் பெயர் இடம்பெறவில்லை. ஆனாலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசு வக்கீல் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் பிரசன்ன குமார் உள்பட 5 பேருக்கும் தண்டனை விதித்து கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

போக்சோ வழக்கு ரத்து

ஆனால் பெங்களூரு கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, பாதிரியார் பிரசன்ன குமார் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஹேமந்த் சந்தானகவுடர் முன்னிலையில் நடந்து வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறுகையில், மனுதாரர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை.

குற்றப்பத்திரிகையில் பெயர் இல்லாத போதும், வக்கீல் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் பிரசன்ன குமார் மீது பதிவான போக்சோ வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்