பணமோசடி தடுப்பு சட்டத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பணமோசடி தடுப்பு சட்டத்தை ரத்து செய்துவிட்டு சிறந்த சட்டத்தை மீண்டும் இயற்றுவோம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் யூடியூப் சேனல் ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் ஆகிய இருவரும் கலந்து கொண்டு பேசினர். அப்போது பணமோசடி தடுப்பு சட்டத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் பேசுகையில், "பணமோசடி தடுப்பு சட்டம் ஒரு புலனாய்வு முகமையின் மீது தன்னிச்சையான மற்றும் தடையற்ற அதிகாரத்தை வழங்கியுள்ளது. இது மற்ற அனைத்து விசாரணை நிறுவனங்களையும் விட மிகவும் சக்தி வாய்ந்தது.
ஆனால் அந்த சட்டம் தற்போது முற்றிலும் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டு சிறந்த சட்டத்தை மீண்டும் இயற்றுவோம் என்று கூறி வருகிறேன்" என்றார்.