மணிப்பூருக்காக ஒரு நொடி கூட பிரதமர் செலவிடவில்லை: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை இன்னும் கட்டுக்கடங்காமல் தொடர்கிறது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-09 10:59 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

"மணிப்பூர் சூழல் பிரதமர் நரேந்திர மோடியின் மோசமான தோல்வி; அதை மன்னிக்க முடியாது. கடந்த 16 மாதங்களில், மணிப்பூருக்காக ஒரு நொடி கூட பிரதமர் நரேந்திர மோடி செலவிடவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை இன்னும் கட்டுக்கடங்காமல் தொடர்கிறது. பாஜக அரசுக்கு உடந்தையாக இருந்ததன் விளைவுகளை மக்கள் அனுபவிக்கிறார்கள்.

மணிப்பூர் மக்களின் குரலை எதிரொலித்த அம்மாநில முன்னாள் கவர்னர் அனுசுயா உய்கே பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரினார். மணிப்பூர் முதல்-மந்திரி உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மணிப்பூரில் பாதுகாப்புச் சூழலுக்கு மத்திய அரசு முழுப்பொறுப்பேற்க வேண்டும். மணிப்பூர் வன்முறையை விசாரிக்கும் சிபிஐ, என்ஐஏ மற்றும் பிற அமைப்புகளை மோடி அரசு தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

பிரதமரைப் போலவே, மத்திய உள்துறை மந்திரியும் மணிப்பூரில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை கைவிட்டதுபோல் தெரிகிறது. மணிப்பூரை தவிர மற்ற மாநிலங்களின் தேர்தல்களில் பேரணிகளில் கலந்துகொண்டு அரசியல் செய்வதில் பிரதமர் மோடி மும்முரமாக இருக்கிறார். எங்கள் மாநிலத்தில் நிலவும் வன்முறையை நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி ஏன் விரும்பவில்லை? என மணிப்பூர் மக்கள் கேட்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்