நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய கர்பா பாடல்: சமூக வலைதளங்களில் வைரல்

ஆவடிக்கலை என்ற கர்பா பாடலை பிரதமர் மோடி எழுதி உள்ளார்.;

Update:2024-10-07 15:28 IST

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, சிறு வயதில் இருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். தான் எழுதிய கவிதைகளை 'மன் கி பாத்' உரையின்போது அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்தவகையில், இந்தியாவில் நவராத்திரி காலம் துவங்கி உள்ளதையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். இப்பண்டிகை வட மாநிலங்களில் தசரா பண்டிகை என்ற பெயரில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், நவராத்திரியை முன்னிட்டு, பிரதமர் மோடி 'கர்பா ' பாடல் ஒன்றை எழுதி உள்ளார். கர்பா என்பது பாரம்பரியமான குஜராத் நடனமாகும். முக்கியமாக நவராத்திரி காலத்தில் இந்த நடனம் நடக்கும்.

இது குறித்து அவர் 'எக்ஸ்' தள பதிவில் கூறியுள்ளதாவது:

இது நவராத்திரியின் புனிதமான நாள். அன்னை துர்கா மீதான பக்தியால் ஒன்றுபட்டு பக்தர்கள் பல்வேறு வகைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அன்னையின் சக்தி மற்றும் கருணைக்கு மரியாதை செலுத்தும் வகையில் 'ஆவடிக்கலை(AavatiKalay)' என்ற தலைப்பில் கர்பா பாடல் ஒன்றை எழுதி உள்ளேன். நமக்கு துர்காவின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கட்டும். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார். மற்றொரு பதிவில், இந்த பாடலை பாடிய பாடகர் பூர்வ மந்திரிக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்