இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் பாராட்டிய பிரதமர் மோடி; ஆகஸ்டு 23-ந் தேதி தேசிய விண்வெளி தினமாக அறிவிப்பு

சந்திரயான்-3 திட்டம் வெற்றி அடைந்ததற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி நேரில் பாராட்டினார். அந்த விண்கலம் தரையிறங்கிய ஆகஸ்டு 23-ந் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்த பிரதமர், நிலவில் லேண்டர் தரையிறங்கிய நிலவு பகுதிக்கு ‘சிவசக்தி’ என பெயர் சூட்டினார்.

Update: 2023-08-26 18:45 GMT

பெங்களூரு:

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் கடந்த 23-ந் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. லேண்டரில் இருந்து வெளியே வந்துள்ள ரோவர் வாகனம் தனது ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளது. பெங்களூரு பீனியாவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-3 திட்ட கட்டளையிடுதல், கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதால், நிலவின் தென்துருவத்தில் ஆய்வு பணியை மேற்கொள்ளும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு உலக நாடுகளும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றன. தென் ஆப்பிரிக்கா நாட்டில் சுற்றுப்பயணத்தில் இருந்த பிரதமர் மோடி, நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை பார்த்து உற்சாகம் அடைந்தார். விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் நாடு திரும்பியதும் சந்திரயான் வெற்றிக்கு காரணமான இந்திய விஞ்ஞானிகளை பாராட்ட முடிவு செய்திருந்தார்.

அதன்படி பிரதமர் மோடி ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து கிரீ்ஸ் நாட்டின் ஏதென்சு நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று நேராக டெல்லி செல்லாமல் பெங்களூரு வந்தார். சுமார் 10 மணி நேர விமான பயணத்திற்கு பிறகு நேற்று காலை 6 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை கர்நாடக அரசின் தலைமை செயலாளர் வந்திதா சர்மா, டி.ஜி.பி. அலோக்மோகன் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

பிறகு அவர் அங்கிருந்து கார் மூலம் 24 கிலோ மீட்டர் பயணித்து பீனியாவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்தார்.

அங்கு அவரை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவரை பிரதமர் கைகுலுக்கியும், கட்டியணைத்தும் பாராட்டினார். அதைத்தொடர்ந்து இஸ்ரோ மையத்திற்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கு கூடியிருந்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.

பின்னர் சந்திரயான்-3 விண்கல மாதிரி, விக்ரம் லேண்டர், ரோவர் மாதிரியை பிரதமருக்கு காட்டிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், அதன் செயல்பாடுகள் என்னென்ன என்று விளக்கமாக எடுத்து கூறினார்.

அதன் பிறகு விஞ்ஞானிகளை பாராட்டி பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-

இந்தியா தற்போது நிலவில் உள்ளது. நமது தேசத்தின் பெருமையை நிலவில் வைத்துள்ளோம். நிலவில் யாரும் செல்லாத இடத்திற்கு நாம் சென்றுள்ளோம். இதுவரை யாரும் செய்யாததை நாம் செய்துள்ளோம். கடந்த 23-ந் தேதி ஒவ்வொரு நொடியும் என் கண்முன்னே மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருந்தது.

'டச் டவுன்' (லேண்டர் தரையிறங்கியது) உறுதியானதும், இஸ்ரோ மையத்திலும், நாடு முழுவதிலும் மக்கள் கொண்டாடிய விதம், அந்த காட்சியை யாரால் மறக்க முடியும், சில நினைவுகள் அழியாதவை. ஒவ்வொரு இந்தியரும் வெற்றி தனக்கே சொந்தம் என்று உணர்ந்தனர். நான் என்னை உணர்ந்தேன், ஒவ்வொரு இந்தியரும் தானும் ஒரு பெரிய தேர்வில் தேர்ச்சி பெற்றதைப் போல உணர்ந்தனர். இன்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் உங்களால் சாத்தியமாக்கப்பட்டவை. எனது நாட்டு விஞ்ஞானிகள் இதை சாத்தியப்படுத்தியுள்ளனர். நான் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் குறைவு தான்.

நிலவில் நமது லேண்டர் உறுதியாக கால் பதித்த புகைப்படத்தைப் பார்த்தேன். ஒரு பக்கம் விக்ரமின் நம்பிக்கை, மறுபக்கம் பிரக்யான் ரோவரின் துணிச்சல். பல்வேறு கேமராக்களில் எடுக்கப்பட்ட படங்கள் இப்போது வெளியாகியுள்ளன. அவை அற்புதமானவை. இந்த படத்தை உலகுக்கு காட்டும் பணியை இந்தியா செய்துள்ளது, விஞ்ஞானிகளாகிய நீங்கள் அனைவரும் செய்துள்ளீர்கள்.

இன்று முழு உலகமும் இந்தியாவின் விஞ்ஞான உணர்வையும், நமது தொழில்நுட்பத்தையும், நமது விஞ்ஞான குணத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளது. சந்திரயான் வெற்றி இந்தியாவின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்தின் வெற்றியாகும். இது நிலவின் ரகசியங்களைத் திறப்பது மட்டுமல்லாமல், பூமியின் சவால்களை தீர்ப்பதற்கும் உதவும். உங்களின் இந்த வெற்றிக்காக சந்திரயான் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், என்ஜினீயர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடம் இனி 'சிவசக்தி முனை' என்று அழைக்கப்படும். மனித குலத்தின் நலனுக்கான தீர்வுகளை சிவன் கொண்டுள்ளார். அந்த தீர்மானங்களை நிறைவேற்றும் திறனை 'சக்தி' நமக்கு வழங்குகிறது. நிலவின் 'சிவசக்தி' புள்ளி இமயமலையும், கன்னியாகுமரியும் இணைக்கப்பட்ட உணர்வை தருகிறது. இந்த சிவசக்தி முனை வரும் தலைமுறையினருக்கு அறிவியலை மனிதகுலத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை ஊக்குவிக்கும். மனித குலத்தின் நலனே நமது உயர்ந்த அர்ப்பணிப்பு. சந்திரயான்-3 திட்டத்தில் நமது பெண் விஞ்ஞானிகள், நாட்டின் பெண் சக்திகள் இவ்வளவு பெரிய பங்கை ஆற்றியுள்ளனர். சந்திரனின் 'சிவசக்தி' புள்ளி பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் இந்த அறிவியல் மற்றும் தத்துவ சிந்தனைக்கு சாட்சியாக இருக்கும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சந்திரயான்-2 விண்கலம் விழுந்த இடத்திற்கு பெயரிட முன்மொழியப்பட்டது. ஆனால் அந்த சூழ்நிலையில் முடிவு எடுப்பதற்கு பதிலாக, சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவை அடையும் போது, இரண்டுக்கும் ஒன்றாக பெயரிடுவோம் என்று சபதம் எடுத்தோம். அதன்படி சந்திரயான்-2 விண்கலம் விழுந்த இடத்திற்கு 'திரங்கா' என்று பெயரிடப்படுகிறது. இந்த பெயர் இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் உத்வேகமாக மாறும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல, வலிமையான மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த 'திரங்கா' நமக்கு கற்று தரும்.

நிலவில் சந்திரயான்-3 திட்டத்தின் லேண்டர் தரையிறங்கிய ஆகஸ்டு 23-ந் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

குழு புகைப்படம்

இதில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி உரையாற்றியபோது சில இடங்களில் உணர்ச்சிவயப்பட்டார். அவர் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பெண் விஞ்ஞானிகளுடன் சில நொடிகள் உரையாடினார். பின்னர் அவர் இஸ்ரோ மையத்தில் இருந்து கார் மூலம் எச்.ஏ.எல். விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். 

Tags:    

மேலும் செய்திகள்