மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி மனு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தனர்.
தொடர்ந்து கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து, மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "இது அரசியல் மன்றம் அல்ல. ஒரு அரசியல் தலைவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். முதல்-மந்திரியை பதவி விலகுமாறு உத்தரவிடுவது எங்கள் பணி அல்ல" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.