திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளின் உறவை பதிவுசெய்ய உத்தரவிட வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிற ஜோடிகளின் உறவைப் பதிவு செய்வதற்கு ஏற்ற சட்ட விதிகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கலாகி உள்ளது.

Update: 2023-02-28 21:04 GMT

பொதுநல வழக்கு

இன்றைய நவீன உலகில் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதும், அதில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெறுவதும் அதிகரித்து வருகிறது.இதையொட்டி, சுப்ரீம் கோர்ட்டில் அரியானாவை சேர்ந்த வக்கீல் மம்தா ராணி சார்பில் வக்கீல் மஞ்சு ஜெட்லி ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கில் கூறி இருப்பதாவது:-

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிற ஜோடிகளுக்கு கோர்ட்டுதான் பாதுகாப்பாளராக இருந்து வந்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிற தம்பதியர்களுக்கும், அத்தகைய உறவில் பிறக்கிற குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கிற வகையில் பல்வேறு தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

சட்டவிதிகள் இல்லை

ஆனாலும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது தொடர்பாக எந்த சட்ட விதிகளும், வழிகாட்டுதல்களும் இல்லை.

இதனால் பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்கிறவர்கள் செய்வது அதிகரித்து வருகிறது. சமீப காலத்தில், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிற பெண்கள் (ஷிரத்தா வாக்கர் உள்பட) பலரும், அவர்களது துணைவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்...

திருமணமாகாமல் சேர்ந்து வாழ்கிறவர்கள், அத்தகைய உறவை பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை வருகிறபோது, அப்படி சேர்ந்து வாழ்கிற தம்பதியருக்கு, ஒருவரைப்பற்றி ஒருவருக்கு சரியான தகவல்கள் கிடைக்கிற நிலை ஏற்படும். அரசுக்கும் அவர்களது திருமண நிலை, குற்ற வழக்கு சரித்திரம் மற்றும் தொடர்புடைய தகவல்கள் கிடைக்கும்.

எனவே திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்கிறவர்கள், தங்கள் உறவை பதிவு செய்வது தொடர்பாக சட்ட விதிகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

சரியாக எத்தனை தம்பதியர் இப்படி திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதை கண்டறியும் விதத்தில் தரவுகள் சேகரிப்பு தளத்தையும் உருவாக்க வேண்டும். திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வதைப் பதிவு செய்யும் நிலை வந்தால்தான் இதெல்லாம் சாத்தியப்படும்.

அரசியல் சாசன மீறல்

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதைப் பதிவு செய்யாமலிருப்பது, அரசியல் சாசனம் பிரிவு 19 மற்றும் 21-ஐ மீறுவதாகும்.

மேலும் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்கிறபோது, அப்படி வாழ்கிற பெண்கள் பொய்யான பாலியல் பலாத்கார வழக்குகளைப் பதிவு செய்வதும் அதிகரித்து வருகிறது. அவர்களது உறவு தொடர்பாக ஆதாரங்களைக் கண்டறிவது கோர்ட்டுகளுக்கு கடினமாகிறது. திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வகிறவர்கள் தங்கள் உறவைப் பதிவு செய்கிறபோது, அதுவே முக்கிய ஆதாரம் ஆகிறது.

இன்றைய வேகமான வாழ்க்கையில், மேற்கத்திய கலாசாரத்தை இளம் தலைமுறையினர் பின்பற்றுகிற சூழலில், உள்நோக்கத்துடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதைத் தடுப்பதற்கு, இத்தகைய பதிவு உதவும்.

இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்