'பிரதமர் மோடி வெற்றி பெற குஜராத் மக்கள் 26 தொகுதிகளிலும் பா.ஜ.க.விற்கு வாக்களிப்பார்கள்' - ஜே.பி.நட்டா நம்பிக்கை

பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று தனது முந்தைய தேர்தல் சாதனையை முறியடிக்கும் என ஜே.பி.நட்டா நம்பிக்கை தெரிவித்தார்.

Update: 2024-01-24 02:17 GMT

காந்திநகர்,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் காந்திநகர் மக்களவை அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் பா.ஜ.க தொண்டர்களிடம் அக்கட்சியின் தேசிய செயலாளர் ஜே.பி.நட்டா பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் 2024 மக்களவை தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று நமது முந்தைய தேர்தல் சாதனையை முறியடிப்போம் என நான் நம்புகிறேன். பிரதமர் மோடி வெற்றி பெற குஜராத் மக்கள் 26 தொகுதிகளிலும் பா.ஜ.க.விற்கு வாக்களிப்பார்கள்.

கடந்த 70 ஆண்டுகளாக சாதி, பிராந்தியம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்தாளும் அரசியலை காங்கிரஸ் கட்சியும், பிற கட்சிகளும் செய்து வருகின்றன. ஆனால் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு, நாட்டில் அரசியலின் வரையறை மாறிவிட்டது."

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளிலும் முறையே 60.1 சதவீதம் மற்றும் 63.1 சதவீத வாக்குகளைப் பெற்று பா.ஜ.க. வெற்றி பெற்றது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி 2014 மக்களவை தேர்தலில் 33.5 சதவீத வாக்குகளையும், 2019 தேர்தலில் 32.6 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்