நீர் கொள்கைக்கு கர்நாடக மந்திரிசபை ஒப்புதல்: தண்ணீரை வீணாக்கினால் அபராதம்

கர்நாடகத்தில் நீர் கொள்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் தண்ணீரை வீணாக்குவோருக்கு அபராதம் விதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.;

Update:2022-08-22 02:44 IST

பெங்களூரு: கர்நாடகத்தில் நீர் கொள்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் தண்ணீரை வீணாக்குவோருக்கு அபராதம் விதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

நிலத்தடி நீர்

கர்நாடக அரசு சமீபத்தில், 'கர்நாடக நீர் கொள்கை'யை கொண்டு வந்துள்ளது. இந்த நீர் கொள்கைக்கு மாநில மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இந்தியாவில் நீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் கர்நாடகமும் ஒன்று. கர்நாடகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் வறட்சி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதனால் வருங்காலத்தில் கர்நாடகம் சவாலான இடர்பாட்டை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும். இதனால் நீர்ப்பாசன திட்டங்களின் தேவை அதிகரிக்கும்.

இருப்பினும் நீர் கொள்கை, நீரை வீணாக்காமல் பாதுகாப்பது, நீரை தேவையின்றி பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிப்பது, நிலத்தடி நீரை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவும் வழிவகை செய்கிறது. இதனால் நீர் வீணாவது தடுக்கப்படும். நீர் ஆதார நிர்வாகத்தை பலப்படுத்துவது, நீர் ஆதார பயன்பாட்டை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

வறட்சி பகுதிகள்

நீர் கொள்கை, கர்நாடகத்தின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வழக்கமாக கிடைக்கும் மழைநீர் அளவில் பற்றாக்குறை ஏற்படும் நிலை இருப்பதாக சொல்கிறது. மேலும் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக நீர் கொள்கை கூறுகிறது. பாசனத்தில் நிலத்தடி நீர் முக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது 56 சதவீத பாசன பரப்புக்கு நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுகிறது.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவது மற்றும் நிலத்தடி நீரில் ரசாயன கலப்பு அதிகரித்து வருவது மிகப்பெரிய கவலை அளிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விவசாயத்திற்கு நீர் தேவை வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 1,491 டி.எம்.சி.யில் இருந்து 1,591 டி.எம்.சி.யாக (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) அதிகரிக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்கு குறைந்து வருகிறது.

நீர் ஆதார மேலாண்மை

மீன்வளம், பால்பண்னை போன்ற விவசாய துணைத்தொழில்களுக்கான நீர் தேவையும் அதிகரித்து வருகிறது. தொழில்துறையின் தேவைக்கான நீரும் 2030-ம் ஆண்டுக்குள் 2 மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நீர் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. நீர் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த நீர் ஆதார மேலாண்மையை உருவாக்கப்படும் என்று அந்த கொள்கையில் சொல்லப்பட்டுள்ளது.

நீர் கிடைப்பதை அதிகரிப்பது, நீர் ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைகள், நீர் சேவை, அதன் செயல்பாட்டை அதிகரிப்பது, நீரை குறைவாக பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிப்பது, வெள்ள நீரை சேமிப்பது குறித்தும் அந்த கொள்கையில் கூறப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கு நீர் பாதுகாப்பை உறுதி செய்வது, நகர-கிராமப்புற நீர் வினியோகத்தை மேம்படுத்துவது, கால்நடை, விவசாயத்தில் நீர் பயன்பாட்டை திறமையாக பயன்படுத்துவது, ஆறு, ஏரி, குளங்கள் உள்பட நீர்நிலைகளை மேம்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

நீர் ஆதார ஆணையம்

நகர-கிராமப்புறங்களில் 24 மணி நேரமும் நீர் வினியோகம் செய்யப்படும். இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். நீர் பயன்பாடு குறைவாக உள்ள பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஊக்குவிக்கப்படும். தொழில் நிறுவனங்கள் நீரை பாதுகாக்க தேவையான உதவிகளும் வழங்கப்படும். இந்த முடிவுகளை அமல்படுத்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஒரு மாநில நீர் ஆதார ஆணையத்தை அமைக்கப்படும் என்று அந்த கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் தலைமையில் நீர் கொள்கை குழு அமைக்கப்படும். இந்த குழு நீர் கொள்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும். மேலும் நீர் கொள்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கரீப் பருவத்தில் வடகர்நாடகத்தில் உள்ள மாவட்டங்களில் 1,080 சதவீதம் வறட்சி அதிகரிக்கும். சில மாவட்டங்களில் வறட்சி 2 மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கர்நாடகத்தில் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. கர்நாடகத்தின் நிலப்பரப்பு ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 791 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது நாட்டின் நிலப்பரப்பில் 5.83 சதவீதம் ஆகும்.

52 தாலுகாக்கள்

மக்கள்தொகையில் கர்நாடகம் 8-வது பெரிய மாநிலம் ஆகும். இதன் மக்கள்தொகை 6.7 கோடி ஆகும். இங்கு கிருஷ்ணா, காவிரி என்ற 2 முக்கிய ஆறுகள் தென் கர்நாடகம் மற்றும் வட கர்நாடகத்தில் ஓடுகின்றன. கர்நாடகத்தில் அதிக பகுதி வறட்சியாக இருக்கும் நிலையில் பாசன நீா் பயன்பாடு முக்கியமானது ஆகும். ஏனென்றால் கர்நாடகத்தில் நீர் ஆதாரம் குறைவாக உள்ளது.

மொத்த நீர் பயன்பாட்டில் 26 சதவீதம் நிலத்தடி நீர் ஆதாரம் மூலம் பெறப்படுகிறது. ஆனால் 15 மாவட்டங்களில் உள்ள 52 தாலுகாக்களில் நிலத்தடி நீர் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 10 தாலுகாக்களில் அந்த நிலை மிக மோசமான நிலையில் அதாவது நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளன. 35 தாலுகாக்களில் 50 சதவீதம் நிலத்தடி நீரை நம்பி இருக்கின்றன.

இவ்வாறு நீர் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்