'பைரன் சிங் பதவியில் இருக்கும் வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது' - ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் செயல்பட வேண்டிய காலம் கடந்துவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

Update: 2023-07-23 12:40 GMT

புதுடெல்லி,

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வரும் கலவரம் மற்றும் அங்குள்ள பழங்குடி பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் ஆகியவை குறித்து எதிர்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் மணிப்பூர் முதல்-அமைச்சர் பதவியில் பைரன் சிங் இருக்கும் வரை அங்கு அமைதி திரும்பாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மணிப்பூர் கொடூரத்தின் உண்மை ஒவ்வொரு நாளும் வெளிவரும் நிலையில், அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பது தெளிவாகிறது.

அங்கு ஆயுதமேந்திய கும்பல்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்கள் வெறித்தனமாக செயல்படுகின்றன. பெண்களும், குடும்பங்களும் மிக மோசமான, கற்பனை செய்ய முடியாத கொடுமைகளை எதிர்கொண்டுள்ளனர்.

பைரன் சிங் முதல்-அமைச்சராக இருக்கும் வரை மணிப்பூரில் நீதியும், அமைதியை நோக்கிய நகர்வும் இருக்காது. பிரதமர் செயல்பட வேண்டிய காலம் கடந்துவிட்டது. அவர் இப்போது செயல்பட வேண்டும், மணிப்பூரில் இரட்டை எஞ்சின் நிர்வாகம் என்று அழைக்கப்படும் வீழ்ச்சியை மறைப்பதற்கு திசைதிருப்பும் செயல்களில் ஈடுபடக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்