சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணியால் அதிர்ச்சி..!!

சென்னை விமான நிலையத்தில், திருச்சி செல்ல இருந்த விமானத்தின் அவசரகால கதவை ஒரு பயணி திறந்தார். இதனால், கட்டாய பரிசோதனைகளுக்கு பிறகு விமானம் தாமதமாக புறப்பட்டது.

Update: 2023-01-17 23:32 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

கடந்த மாதம் 10-ந்தேதி சென்னை விமான நிலையத்தில் நடந்த இச்சம்பவம் தற்போதுதான் வெளியே தெரிய வந்துள்ளது.

அன்றைய தினம், 'இண்டிகோ' தனியார் விமானம் திருச்சிக்கு செல்ல தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

விமானத்தில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். ஏறிய ஒரு பயணி தவறுதலாக வலதுபக்க அவசரகால கதவை திறந்து விட்டார்.

விமான சிப்பந்திகள் இதை கவனித்து விட்டனர். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவசரகால கதவு சரியாக பொருத்தப்பட்டது. விமானத்தின் அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.

மன்னிப்பு கோரினார்

கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய என்ஜினீயரிங் பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது. இந்த சோதனைகளால் விமானம் தாமதமாக புறப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட பயணி தனது செயலுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளது.

அதுபோல், விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகமும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விமான பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படவில்லை என்று கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்