பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

விலைவாசி உயர்வு, மணிப்பூர் விவகாரம் போன்றவை இன்று கூடும் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2023-07-20 00:19 GMT

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தபோது எடுத்த படம்

புதுடெல்லி,

இந்திய நாடாளுமன்றம் ஆண்டுதோறும் 3 கூட்டத்தொடர்களை காண்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என அந்த 3 தொடர்களும் நாட்டின் சிறந்த நிர்வாகத்தை உறுதிப்படுத்த உதவுகின்றன.

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 17 அமர்வுகள் இடம்பெறுகிறது.

32 மசோதாக்கள்

இந்த தொடரில் மேற்கொள்ள வேண்டிய அலுவல்கள் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது.

இதில் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மழைக்கால கூட்டத்தொடரில் டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்ட மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா, தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா என சுமார் 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விவாதிக்க தயார்

ஆனால் மணிப்பூர் கலவரம், டெல்லி அவசர சட்டம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் என பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழலில் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில் மிகப்பெரிய அரசியல் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜனதாவுக்கு எதிராக 'இந்தியா' என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவதால் மேற்படி பிரச்சினைகளில் அரசுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெறும் என தெரிகிறது.

எனவே இந்த தொடரை சுமுகமாக நடத்தி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இதற்காக மணிப்பூர் விவகாரம் உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நேற்று கூறினார்.

அனைத்துக்கட்சி கூட்டம்

இந்த நிலையில் நாடாளுமன்ற தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அரசு நேற்று அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி உள்பட 44 மந்திரிகள் கலந்து கொண்டனர்.

இதைப்போல தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற அவைத்தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என 44 கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய மத்திய மந்திரிகள், அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்ற விதிகள் மற்றும் அவைத்தலைவர் அங்கீகாரத்துக்கு உட்பட்டு விவாதிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

மணிப்பூர் கலவரம்

அதேநேரம் மணிப்பூர் கலவரம், பாலசோர் ரெயில் விபத்து, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, கூட்டாட்சி தத்துவம் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதைப்போல மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என பிஜூ ஜனதாதளம் சார்பில் பங்கேற்ற சஸ்மித் பத்ரா அறிவுறுத்தினார். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாரதிய ராஷ்டிர சமிதி மற்றும் இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்த கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவை கட்சித்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, 'நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதற்கு அரசு விரும்பினால், எதிர்க்கட்சிகளின் பிரச்சினைகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இரு கைகளை கொண்டே ஓசை எழுப்ப முடியும்' என்று தெரிவித்தார்.

சமரசத்துக்கு இடமில்லை

மணிப்பூர் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக நாளை (இன்று) ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர விரும்புவதாக கூறிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, 2 மாதங்களுக்கு மேலாக மணிப்பூர் கலவரம் நீண்டபோதும், பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் சாதிப்பதாகவும், இந்த விவகாரத்தில் அறிக்கையாவது அவர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதைப்போல விலைவாசி உயர்வு, மணிப்பூர் கலவரம், அதானி பிரச்சினை, கூட்டாட்சி தத்துவம் மீதான தாக்குதல் போன்ற விவகாரங்களில் சமரசத்துக்கு இடமில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் 8 சிவிங்கிப்புலிகள் இறந்ததற்கு ஆலோசனை கூட்டம் நடத்திய பிரதமர் மோடி, மணிப்பூர் நிலவரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்