வங்காளதேச விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன..? மக்களவையில் ஜெய்சங்கர் இன்று விளக்கம்

வங்காளதேச விவகாரம் தொடர்பாக மக்களவையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று விளக்கம் அளிக்கிறார்.

Update: 2024-08-06 07:24 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தால் 14 காவலர்கள் உள்பட 98 பேர் உயிரிழந்தனர். மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்காளதேசத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகி, தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்துள்ள அவருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும், ஹசீனா லண்டன் செல்லும் வரை இங்கேயே பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் வங்கதேசத்தில் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

இந்நிலையில் வங்காளதேச விவகாரம் தொடர்பாக மக்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று விளக்கம் அளிக்க உள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மேலும் வங்காளதேச விவகாரத்தில் இந்தியாவின் நிலை குறித்து பிற்பகல் 3.30 மணிக்கு மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியும் இந்தியாவின் தேசிய நலன் தொடர்பான விவகாரம் குறித்து அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்