இந்தியாவில் தகவல் தரவு பாதுகாப்பு மீறல் - டுவிட்டர் மூத்த இயக்குநர் உட்பட நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு கடும் கண்டனம்!
டுவிட்டரின் இந்திய செயல்பாடுகள் குறித்து டுவிட்டர் உயர் அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியது.
புதுடெல்லி,
உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரின் இந்திய செயல்பாடுகள் குறித்து டுவிட்டர் உயர் அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியது.
டுவிட்டரின் இந்திய பிரிவின் மூத்த இயக்குநர் (பொதுக் கொள்கை பிரிவு) சமிரன் குப்தா மற்றும் இயக்குநர் (பொதுக் கொள்கை பிரிவு) ஷகுப்தா கம்ரான் ஆகியோருக்கு நாடாளுமன்ற நிலைக்குழு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு செயல்பட்டு வருகிறது.இந்த குழுவின் கூட்டத்தில், சசி தரூர், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், டிஎம்சி எம்.பி மஹுவா மொய்த்ரா, டிஆர்எஸ் எம்.பி ரஞ்சித் ரெட்டி, பாஜகவின் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சிபிஐ(எம்) கட்சியின் ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், நேற்று டுவிட்டரின் முன்னாள் தலைவர் (பாதுகாப்பு பிரிவு) பீட்டர் ஜாட்கோவின் அறிக்கைகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு அவர்களிடம் கேள்வி எழுப்பியது.
'டுவிட்டர் நிறுவனம் தெரிந்தே அந்நிறுவனத்தின் ஊதியம் வழங்கும் பிரிவில் இந்திய அரசாங்கத்தின் முகவர்களை அனுமதித்துள்ளது. அந்த முகவர்கள் டுவிட்டர் நிறுவனத்தின் சில அமைப்புகள் மற்றும் பயனர் தரவுகள் குறித்த விவரங்களை நேரடியாக அணுக முடிந்தது' என்று டுவிட்டரின் முன்னாள் தலைவர் (பாதுகாப்பு பிரிவு) பீட்டர் ஜாட்கோவின் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஆனால் டுவிட்டர் அதிகாரிகள் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளனர்.
டுவிட்டர் அதிகாரிகளிடம் அவர்களின் தரவுப் பாதுகாப்புக் கொள்கைகள் உள்ளூர் கொள்கைகள் மற்றும் ஒற்றை உலகளாவிய தனியுரிமைக் கொள்கையுடன் ஒத்திசைகின்றனவா? வெவ்வேறு நாடுகளின் தேசிய தனியுரிமைக் கொள்கைகளில் ஏற்படும் முரண்பாடுகளை டுவிட்டர் எவ்வாறு கையாள்கிறது என்று கேட்கப்பட்டது.
இதற்கு நிர்வாகிகள் திருப்திகரமான பதில்களை அளிக்கவில்லை. தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பற்றிய கேள்விகளையும் நிர்வாகிகள் தவிர்த்துவிட்டனர். அதைத் தொடர்ந்து டுவிட்டரின் மூத்த இயக்குநர் உட்பட டுவிட்டர் உயர்மட்ட நிர்வாகிகள் நாடாளுமன்ற நிலைக்குழு எம்.பி.க்களால் கண்டிக்கப்பட்டனர்.
இருப்பினும், டுவிட்டர் அதிகாரிகள், இந்தியாவில் தரவு பாதுகாப்பு மீறல் எதுவும் இல்லை என்று குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
பொதுமக்களின் தகவ்ல் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பிரச்சினையில் தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூக ஊடக நிறுவனங்கள், அமைச்சகங்கள் மற்றும் பிற கட்டுப்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்களுடன் நாடாளுமன்றக் குழு கூட்டங்களை நடத்தி வருகிறது.
அதன்படி, தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விரிவான அறிக்கையை நாடாளுமன்றக் குழு செய்து வருகிறது.