பயங்கரவாதிகள் தாவுத் இப்ராகிம், ஹபீஸ் சயீத் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கமல் சென்ற பாகிஸ்தான் அதிகாரி...

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.;

Update:2022-10-18 18:43 IST

புதுடெல்லி,

இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்பின் பொதுச்சபை கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இன்டர்போல் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இது இந்தியாவில் கடைசியாக 1997 இல் நடைபெற்றது.

இந்த இன்டர்போல் பொதுச்சபை கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த பொதுச்சபைக் கூட்டம் இன்று தொடங்கி வரும் 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் 195 இன்டர்போல் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மந்திரிகள், போலீஸ் அமைப்பின் தலைவர்கள், தேசிய மத்திய பணியகங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் மொஹ்சின் பட் இந்த பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய பிறகு வெளியே வந்த அவரிடம் பத்திரிக்கையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறிப்பாக 1993 மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராகிம், மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதலை திட்டமிட்டு நடத்திய ஹபீஸ் சயீத் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இது குறித்து மொஹ்சின் பட்-இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இந்த கேள்விகளுக்கு மொஹ்சின் பட் எந்த பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்