12 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இந்தியா வந்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி...!
கராச்சியில் இருந்து தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி இன்று கோவா வந்தடைந்தார்.;
லாகூர்,
இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு இன்றும் நாளையும் (மே 4,5) கோவாவில் நடைபெற உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில் உறுப்பு நாடுகளுக்கு மாநாட்டில் பங்கேற்கும்படி இந்தியா அழைப்பு விடுத்திருந்தது.
அந்த வகையில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ சர்தாரிக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடிதம் அனுப்பி இருந்தார்.
கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க கராச்சியில் இருந்து தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி இன்று கோவா வந்தடைந்தார்.
12 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.