டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியாவின் உதவியாளர் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை
டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் உதவியாளர் தேதேந்திர சர்மாவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து விளக்கம் அளித்த துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, பழிவாங்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்றும், சிபிஐ சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், கடந்த மாதம் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் உதவியாளர் தேதேந்திர சர்மாவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வாக்குமூலம் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக தனது வீட்டில் நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்காததால் தனது உதவியாளரை தேதேந்திர சர்மாவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளதாக மணிஷ் சிசோடியா குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த கைது நடவடிக்கைக்கு பின்னால் பாஜக இருப்பதாகவும் தேர்தலை பார்த்து அக்கட்சி பயப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.