'எங்கள் கடமை இன்னும் முடியவில்லை' - மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி

தண்டவாளங்கள் சரிசெய்யப்பட்ட நிலையில் விபத்து நடந்த பகுதி வழியாக சோதனை முறையில் ரெயில் இயக்கப்பட்டது.

Update: 2023-06-04 20:26 GMT

புவனேஸ்வர்,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின.

இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயம் விபத்து நடந்த பகுதியில் தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை அகற்றும் பணிகளும் அவ்வழியாக மீண்டும் ரெயில்களை இயக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விபத்து நடந்து 51 மணி நேரத்திற்கு பின் விபத்து நடந்த தண்டவாளம் வழியாக மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் சரிசெய்யப்பட்ட நிலையில் விபத்து நடந்த பகுதி வழியாக சோதனை முறையில் ரெயில் இயக்கப்பட்டது. விபத்து நடந்த பகுதியில் நேற்று முன் தினம் முதல் தங்கியுள்ள மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதையும் ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எங்கள் கடமை இன்னும் முடியவில்லை. மாயமான நபர்களை கண்டறிந்து விரைவில் அவர்களை தங்கள் குடும்பங்களோடு சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு" என்று தெரிவித்தார். இந்த பேட்டியின் போது மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உணர்ச்சிவப்பட்டு கண்கலங்கினார். 



Tags:    

மேலும் செய்திகள்