தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு மண்டியாவில் மாட்டு வண்டியுடன் விவசாயிகள் சாலை மறியலுக்கு முயற்சி

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் நேற்று விவசாயிகள் மாட்டு வண்டியுடன் சாலை மறியலுக்கு முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-22 18:45 GMT

பெங்களூரு-

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் நேற்று விவசாயிகள் மாட்டு வண்டியுடன் சாலை மறியலுக்கு முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு

கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நதி நீர் பிரச்சினை பல நூற்றாண்டாக உள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டுள்ளது.

இதற்கிடையே கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாத நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது சரியல்ல எனவும், தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட்ட கர்நாடக அரசை கண்டித்தும் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணாம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதன்தொடர்ச்சியாக நேற்று முன்தினம் பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்தவர்கள் மண்டியாவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்துவாலு அருகே பெங்களூரு-மைசூரு அதிவிரைவுச் சாலையில் டயர்களுக்கு தீவைத்து வாகனங்களை மறித்தனர். இதனால் போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

மாட்டு வண்டியுடன் போராட்டம்

இந்தநிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவதை கண்டித்து நேற்று மண்டியாவில் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மண்டியா மாவட்டம் இந்துவாலு பகுதியில் நடந்த இந்த போராட்டத்தில் விவசாயிகள் மாட்டு வண்டி மற்றும் டிராக்டருடன் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள்  தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி பெங்களூரு-மைசூரு தேசிய விரைவு சாலையை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் பெங்களூரு-மைசூரு சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

விவசாயிகள் கைது

இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர விவசாயிகளை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் அதிகமான விவசாயிகளை கைது செய்து, குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். பின்னர் அவர்களை பஸ்களில் ஏற்றி சென்று திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்