'அக்னிபத்' பற்றி விவாதிக்க மறுப்பு எதிரொலி: நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

‘அக்னிபத்’ பற்றி விவாதிக்க மறுக்கப்பட்டதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-07-22 23:01 GMT

புதுடெல்லி,

பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் "முப்படைகளுக்கு 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், இதுகுறித்து நாடாளுமன்ற பரிசீலனை அவசியம்" என கூறி, விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நிலைக்குழு தலைவர் ஜூவல் ஓரத்திடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், உத்தம் குமார் ரெட்டி, பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலி ஆகியோர், தலைவர் ஜூவல் ஓரத்திடம், பாதுகாப்பு துறைக்கான ஆலோசனை குழு கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வாதிட்டனர்.

'அக்னிபத்' திட்டம் பற்றி விவாதிக்காவிட்டால், அது நாடாளுமன்றத்துக்கு அவமதிப்பு என வாதிடப்பட்டது. அடுத்த கூட்டத்திலாவது இதுபற்றி விவாதிக்க பட்டியலிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ஆனாலும் ஜூவல் ஓரம், அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்