'ஆபரேஷன் அஜய்' திட்டத்தில் ஏர் இந்தியா 2 சிறப்பு விமானங்களை இயக்கும் எனத் தகவல்

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 2 சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-10-13 15:25 GMT

புதுடெல்லி,

இஸ்ரேல் மீது, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கையில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். சில நிமிடங்களுக்குள் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் வீசப்பட்டதால் இஸ்ரேல் நிலைகுலைந்தது.

ஆனாலும் சுதாரித்துக்கொண்ட இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பினருக்கு முழுமையான போரை அறிவித்து கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் இந்த அதிதீவிர போர் 6 நாட்களை கடந்தும் நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

அதேநேரம் போரில் இறங்கி இருக்கும் இரு தரப்புக்கும் பல நாடுகள் ஆதரவும், உதவிகளும் வழங்கி வருகின்றன. இதனால் போர் எப்போது முடிவுக்கு வரும்? என்று தெரியவில்லை. இதற்கிடையே இஸ்ரேலில் வசித்து வரும் பல்வேறு வெளிநாட்டவர்களும் இந்த போரில் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, நேபாளம் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பலர் இந்த போரில் கொல்லப்பட்டு உள்ளனர்.எனவே இஸ்ரேலில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை அந்தந்த நாடுகள் மீட்டு வருகின்றன.

இந்த பணிகளுக்கு இஸ்ரேலும் ஒத்துழைத்து வருகிறது.போர்க்களமாக மாறியிருக்கும் இஸ்ரேலில் இந்தியர்களும் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். போரின் உக்கிரத்தால் அவர்களில் பலரும் நாடு திரும்ப துடித்து வருகின்றனர்.எனவே இவர்களை மீட்க மத்திய அரசு களத்தில் இறங்கி இருக்கிறது.ஏற்கனவே ரஷியா தாக்குதலில் சிக்கிய உக்ரைனில் இருந்தும், உள்நாட்டுப்போரில் சிக்கிய தெற்கு சூடானில் இருந்தும் இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு இருந்தது.

இந்த அனுபவங்களின் அடிப்படையில் இஸ்ரேலில் இருந்தும் இந்தியர்களை மீட்கும் பணிகளை தொடங்கி இருக்கிறது. இதற்காக 'ஆபரேசன் அஜய்' என்ற பெயரில் அதிரடி மீட்பு நடவடிக்கையை அறிவித்து உள்ளது.இதை மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார்.இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் இந்த சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்ப உள்ளனர். அந்தவகையில் 212 இந்தியர்கள் அடங்கிய முதல் குழுவுடன் இந்த விமானம் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியா வந்தடைந்தது.

இந்த நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 2 சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகங்களில் பதிவு செய்த இந்தியர்களை 2 விமானங்களில் தாய்நாட்டிற்கு அழைத்து வர இந்தியா திட்டமிட்ட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்