ஒரே நாடு ஒரே தேர்தல்.. பொதுமக்களிடம் கருத்து கேட்பு: 15ஆம் தேதி வரை அனுப்பலாம்

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக, உயர்மட்டக் குழு இரண்டு முறை ஆலோசனை நடத்தி, தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டது.

Update: 2024-01-05 08:25 GMT

புதுடெல்லி:

இந்தியாவில் 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்தே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். ஆனால் இது சாத்தியம் அல்ல என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். எனினும் இந்த விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் உறுப்பினர்களாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராகவும், சட்டத்துறை செயலாளர் நிதின் சந்திரா செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் குழுவில் சேர்க்கப்பட்டார். ஆனால் குழு அமைக்கப்பட்டவுடன் அவர் ராஜினாமா செய்தார்.

இந்த உயர்மட்டக் குழு இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தியிருக்கிறது. இந்த கூட்டத்தின் வாயிலாக தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடம் ஆலோசனை பெறப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை வரும் 15க்குள் தெரிவிக்கலாம் என்று உயர்மட்டக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் குறித்த சட்டங்களில் செய்ய வேண்டிய திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனைகளை அனுப்பலாம். ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை https://onoe.gov.in என்ற இணைதளம் வாயிலாகவோ, se-hlc@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு தனித்தனியாக நடத்தாமல் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதே 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதாகும்.

அவ்வாறு நடத்தும்போது பொதுமக்கள் ஒரே நேரத்தில் 2 வாக்குகளை செலுத்த வேண்டும். சட்டசபைகளுக்கும் மக்களவைக்கும் ஒரே தேர்தல் நடத்துவதால் அரசுக்கான தேர்தல் செலவு பெருமளவு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்