உமர் அப்துல்லா தேர்தல்களில் போட்டியிடமாட்டார் - பரூக் அப்துல்லா அறிவிப்பு
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை உமர் அப்துல்லா தேர்தல்களில் போட்டியிடமாட்டார் என்று பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு சட்டசபை தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை தேசிய மாநாட்டுக்கட்சி நியமித்து வருகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா, பொறுப்பாளர் நியமனம் குறித்து அவர்களிடம் விளக்கினார்.
அப்போது அவர் கூறுகையில், 'காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப கிடைக்கும்வரை தேர்தல்களில் போட்டியிடமாட்டேன் என உமர் அப்துல்லா ஏற்கனவே கூறிவிட்டார்' என்று தெரிவித்தார்.
முன்னாள் முதல்-மந்திரியும், கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா இந்த முடிவை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதை அவரது தந்தையும், கட்சித்தலைவருமான பரூக் அப்துல்லாவும் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. சட்டசபை தேர்தலுக்காக தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், தேர்தலில் வேறு கட்சிகளுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லையா? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, 'தேர்தலுக்கு இன்னும் போதுமான நேரம் இருப்பதால், அதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும்' என்று பதிலளித்தார்.