முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கைப்பாவையாக செயல்படுகிறாரா?-காங்கிரஸ் கேள்வி
உத்தரவை மாற்றிய அதிகாரிகள்: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கைப்பாவையாக செயல்படுகிறாரா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
முதல்-மந்திரி பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் மாற்றியுள்ளனர். அப்படி என்றால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கைப்பாவையாக செயல்படுகிறாரா?. இதன் மூலம் உங்களுக்கு மதிப்பே இல்லை என்று அர்த்தம் இல்லையா?. இதற்கு அதிகாரிகளிடம் 40 சதவீத கமிஷன் ஊழல் குறித்த ஆதாரங்கள் இருப்பது தான் காரணமா?. போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களிடமே கொள்ளையடிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள், போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஊழல் ஆட்சியில் ஏழைகள் வங்கிகளில் வைத்துள்ள டெபாசிட்டுக்கும் பாதுகாப்பு இல்லை. கூட்டுறவு வங்கிகள் ஊழல் மையங்களாக மாறிவிட்டன. குரு ராகவேந்தரா கூட்டுறவு வங்கியை தொடர்ந்து தற்போது இன்னொரு கூட்டுறவு வங்கியில் முறைகேடுகள் நடந்துள்ளன. வேலியே பயிரை மேய்கிறது. ஆனால் அதில் அரசு மவுனம் காக்கிறது. பா.ஜனதாவில் மந்திரி பதவியை மிரட்டி பெறுவதாக அக்கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். மந்திரிகள் யார், யார் மிரட்டி பதவியை பெற்றனர் என்பதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூற வேண்டும். பசனகவுடா பட்டீல் யத்னாலை, பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். இதில் மிரட்டல் தந்திரம் அடங்கியுள்ளதா?.
இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.