ஒடிசா: 5 பெண்கள் உட்பட 21 புதிய மந்திரிகள் பதவியேற்றனர்..!
ஒடிசாவில் 5 பெண்கள் உட்பட 21 மந்திரிகள் அடங்கிய புதிய மந்திரிசபை பதவியேற்றது.
புவனேஸ்வர்,
ஒடிசாவில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த மந்திரிகள் அனைவரும் நேற்று மொத்தமாக ராஜினாமா செய்தனர். ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சி சார்பில் 5-வது முறையாக முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார், நவீன் பட்நாயக். அங்கு 2024-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நவீன் பட்நாயக் 2024-ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு, கட்சியை பலப்படுத்தும் நோக்கில் தனது மந்திரி சபையை 3 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக மாற்றியமைக்க முடிவு செய்துள்ளார். எனவே தற்போதைய மந்திரிகள் அனைவரையும் பதவி விலகுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி மாநில மந்திரிகள் அனைவரும் நேற்று ஒருவர் பின் ஒருவராக பதவி விலகினர். தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் எஸ்.என்.பாட்ரோவிடம் வழங்கினர். மொத்தமுள்ள 20 மந்திரிகளும் கடிதம் கொடுத்து விட்டதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் இன்று புவனேஸ்வரில் உள்ள லோக் சேவா பவனில் 13 கேபினட் மற்றும் 8 இணை மந்திரிகள் என 5 பெண்கள் உட்பட 21 புதிய மந்திரிகள் பதவியேற்றனர்.
கடந்த மந்திரிசபையில் 2 பெண்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில் புதிய மந்திரிசபையில் 3 கேபினட் அமைச்சர்கள் உட்பட 5 பெண் எம்எல்ஏக்கள் மந்திரிகளாக பதவியேற்றுள்ளனர். புதிய மந்திரிகளுக்கு கவர்னர் கணேஷி லால் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
மாநிலங்களவை தேர்தலில் பிஜூ ஜனதாதளம் சார்பில் களமிறக்கப்பட்ட 3 வேட்பாளர்களும் நேற்று முன்தினம் போட்டியின்றி வெற்றி பெற்றதுடன், அங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று கட்சி பலமிக்கதாக இருக்கும் சூழலில் இந்த மந்திரிசபை மாற்றம் நடைபெறுகிறது. 147 உறுப்பினர் கொண்ட ஒடிசா சட்டசபையில் பிஜூ ஜனதாதளம் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.