போலீஸ்காரரை டிராக்டர் ஏற்றி கொன்ற வழக்கில் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

போலீஸ்காரரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்தனர்.

Update: 2023-06-17 21:00 GMT

கலபுரகி:

மணல் கடத்தல்

கலபுரகி மாவட்டம் ஜேவர்கி தாலுகா நிலோகி போலீஸ் நிலையத்தில் மயூர் சவுகான் (வயது 51) என்பவர் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மயூர் சவுகான் உள்பட சில போலீசார் பணியில் இருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பீமா ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது சோதனை சாவடி அருகே ஒரு டிராக்டரில் மணல் ஏற்றிக் கொண்டு செல்வதை போலீஸ்காரர்கள் பார்த்தனர்.

அந்த டிராக்டரை நிறுத்தும்படி டிரைவரிடம் கூறினார்கள். ஆனால் அவர் டிராக்டரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். சிறிது தூரத்தில் வைத்து டிராக்டரை 2 போலீஸ்காரர்களும் மடக்க முயன்றனர். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டரை டிரைவர் ஏற்றினார். இதில் கீழே விழுந்த போலீஸ்காரர் மயூர் சவுகான் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு இஷா பண்ட் உள்ளிட்ட முக்கிய போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

துப்பாக்கியால் சுட்டு...

மேலும் உயிரிழந்த போலீஸ்காரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக போலீசார், சித்தப்பா என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சாய்பன்னா கரஜகி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் விஜயாப்புரா மாவட்டம் அலமேளா கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கு பதுங்கி இருந்த சாய்பன்னா கரஜகியை கைது செய்தனர்.

இதையடுத்து அவரை விசாரணைக்காக அழைத்து வந்தனர். அப்போது இயற்கை உபாதைக்காக தன்னை விடுமாறு சாய்பன்னா கரஜகி கூறினார். உடனே 2 போலீசார், அவரை அழைத்து சென்றனர். அப்போது அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.

அந்த சந்தர்ப்பத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாத்ரமி துப்பாக்கியால் சாய்பன்னா கரஜகி காலில் சுட்டார். இதில் காலில் குண்டு பாய்ந்து சாய்பன்னா கரஜகி சுருண்டு விழுந்தார். உடனே அவரை பிடித்த போலீசார், உடனே கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் பிரபல ரவுடி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்