6 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்த நோட்டா

கர்நாடக சட்டசபை தேர்தலில் நோட்டாவுக்கு 2.69 லட்சம் ஓட்டுகள் கிடைத்துள்ளது. 6 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நோட்டா ஓட்டுகள் நிர்ணயித்துள்ளன.

Update: 2023-05-14 20:29 GMT

பெங்களூரு:-

நோட்டாவுக்கு 2.69 லட்சம் ஓட்டு

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தோல்வி அடைந்துள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் நோட்டாவின் பங்கு மிகப்பெரியதாக இருந்துள்ளது. அதாவது ஒரு வேட்பாளர்களுக்கும் ஓட்டு போட விரும்பாத வாக்காளர்கள் நோட்டாவுக்கு ஓட்டுப்போட்டு தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்தமாக நோட்டாவுக்கு 2 லட்சத்து 69 ஆயிரத்து 763 ஓட்டுகளை பெற்றுள்ளது. நோட்டாவின் ஓட்டு சதவீதம் 0.69 என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆம்ஆத்மி வேட்பாளர்களை முந்திய...

கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 381 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்திருந்தது. தற்போது, நோட்டாவுக்கு 2.69 லட்சம் ஓட்டுகள் கிடைத்திருப்பதன் மூலம், 224 தொகுதிகளிலும் சராசரியாக 1,200 ஒட்டுகள் நோட்டா பெற்றுள்ளது. இது பல்வேறு அரசியல் கட்சிகளை காட்டிலும், நோட்டாவுக்கு அதிகமாக கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

ஜனதாதளம் (எஸ்) கட்சி போட்டியிட்ட 30 தொகுதிகளில், அக்கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது. அதுபோல், ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட 110 தொகுதிகளில், அக்கட்சி வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகளை விட நோட்டாவுக்கு அதிகம் கிடைத்துள்ளது. மேலும் 130 தொகுதிகளில் ஆம்ஆத்மி வேட்பாளர்கள் 1,000 வாக்குகளை தாண்டவில்லை. ஆனால் 95-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது.

6 தொகுதிகளின் வெற்றி, தோல்வி

அதே நேரத்தில் 6 தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் விதமாக நோட்டா இருந்துள்ளது. சிஞ்சோலி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் 858 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அந்த தொகுதியில் நோட்டாவுக்கு 1,003 ஓட்டுகள் கிடைத்திருந்தது. காந்திநகர் தொகுதியில் தினேஷ் குண்டுராவ் 105 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அந்த தொகுதியில் நோட்டாவுக்கு 1,692 ஓட்டுகள் நோட்டாவுக்கு கிடைத்திருந்தது.

ஜகலூரில் காங்கிரஸ் வேட்பாளர் 874 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அங்கு நோட்டாவுக்கு 1,996 ஓட்டுகள் கிடைத்தது. ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் 16 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி இருந்தார். அங்கு நோட்டாவுக்கு 1,192 பேர் வாக்களித்திருந்தனர். மூடிகெரேயில் காங்கிரஸ் வேட்பாளர் 722 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அங்கு நோட்டாவுக்கு 1,166 பேர் ஆதரவுஅளித்திருந்தனர்.

சிருங்கேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 201 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி இருந்தார். அங்கு நோட்டாவுக்கு 678 ஓட்டுகள் கிடைத்திருந்தது. இந்த 6 தொகுதிகளிலும் நோட்டாவுக்கு போடாமல் ஏதேனும் அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர்கள் ஓட்டு போட்டு இருந்தால் வெற்றி, தோல்வியில் மாறுதல் ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது.

பெங்களூருவில் நோட்டாவுக்கு 60 ஆயிரம் ஓட்டு

கர்நாடக சட்டசபையில் பெங்களூருவில் 28 தொகுதிகள் உள்ளன. அவற்றில் காங்கிரஸ், பா.ஜனதா கடந்த முறை போன்று, தற்போதும் வெற்றி பெற்று சமபலத்துடன் இருந்தது. ஆனால் நோட்டாவுக்கு 28 தொகுதிகளிலும் ஒட்டு மொத்தமாக 60 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்துள்ளது. 28 தொகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது. அதிகபட்சமாக மகாதேவபுரா தொகுதியில் 4,775 ஓட்டுகள் நோட்டாவுக்கு கிடைத்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக யஷ்வந்தபுரத்தில் 2,857 ஓட்டுகளும், தாசரஹள்ளியில் 2,179 ஓட்டுகளும், மல்லேஸ்வரம் தொகுதியில் 2079 ஓட்டுகளும் நோட்டாவுக்கு கிடைத்திருந்தது. இதன்மூலம் கிராமப்புறங்களை காட்டிலும் பெங்களூரு நகரில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்