கேரளாவில் பள்ளி குழந்தைகள் 2 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு; மந்திரி எச்சரிக்கை

கேரளாவில் பள்ளி குழந்தைகள் 2 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-06-06 12:53 GMT



திருவனந்தபுரம்,



நாட்டில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக 4 ஆயிரத்திற்கும் கூடுதலாக தொற்று எண்ணிக்கை பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

கேரளா, மராட்டியம் உள்ளிட்டவற்றில் இந்த பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து, அடுத்த பெருந்தொற்று பரவல் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த சூழலில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் விழிஞ்சம் பகுதியில் பள்ளி செல்லும் குழந்தைகள் 2 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

டையோரியா எனப்படும் வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் ரோட்டோவைரசை ஒத்த பண்புகளை இந்த வைரசானது கொண்டுள்ளது. இதுபற்றி கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் அறிக்கை ஒன்றை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இந்த வியாதி அதிக தொற்றும் தன்மை கொண்டது என்பதனால், மக்கள் அனைவரும் நல்ல சுகாதார முறையை கடைப்பிடிக்கும்படி அவர் கேட்டு கொண்டுள்ளார்.

இதற்கு ஒரு நாள் முன்பு, கொல்லம் மாவட்டத்தின் கொட்டரக்கராவில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் படித்து வரும் மாணவர்களில் 12 பேர் உணவு நஞ்சானதில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுடைய மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதில் நோராவைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. எனினும், இதனால் பயப்பட வேண்டியதில்லை. ஆனால், மக்கள்எச்சரிக்கையுடனும், சுகாதாரத்துடனும் இருக்க வேண்டும் என ஜார்ஜ் கேட்டுள்ளார். கடந்த ஏப்ரலில் அமெரிக்காவில் இந்த நோராவைரசின் பாதிப்பு பரவி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்