காஷ்மீரில் வெளியாட்கள் யாருக்கும் நிலம் வழங்கப்படவில்லை; மெகபூபா முப்தி குற்றச்சாட்டுக்கு காஷ்மீர் நிர்வாகம் பதில்

காஷ்மீரில் வெளியாட்கள் யாருக்கும் நிலம் வழங்கப்படவில்லை என்ற மெகபூபா முப்தி குற்றச்சாட்டுக்கு காஷ்மீர் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

Update: 2023-07-06 20:31 GMT

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், நிலமற்ற குடும்பங்களுக்கு வீடுகளை கட்ட 150 சதுர அடி நிலம் வழங்கத் தொடங்கியுள்ளதாக துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று முன்தினம் அறிவித்தார். நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இது குறித்து கருத்து தெரிவித்த காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி "வீடற்ற மக்களுக்கு நிலம் வழங்கும் சாக்குப்போக்கின் கீழ் துணை நிலை ஆளுநரின் நிர்வாகம் குடிசைகளையும், வறுமையையும் யூனியன் பிரதேசத்தில் இறக்குமதி செய்கிறது. அதுமட்டும் இன்றி இந்த திட்டத்தின் மூலம் வெளியாட்களுக்கு நிலத்தை வழங்கி, யூனியன் பிரதேசத்தின் மக்கள்தொகையை மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறது" என குற்றம் சாட்டினார்.

மெகபூபா முப்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள காஷ்மீர் துணை நிலை ஆளுநரின் செய்தி தொடர்பாளர் "வீடு வழங்கும் திட்டம் குறித்த மெகபூபா முப்தியின் கூற்று உண்மைக்கு புறம்பானது. அவரது கருத்து பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் மற்றும் நிலமற்றவர்களுக்கு நிலம் ஒதுக்க வகை செய்யும் காஷ்மீர் வருவாய் சட்டம் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் உள்ளது. சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வெளியாட்களுக்கு நிலம் ஒதுக்கப்படவில்லை" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்