இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.

Update: 2024-08-17 23:56 GMT

புதுடெல்லி,

ஆப்ரிக்க நாடுகளில் கடந்த ஆண்டு ஜனவரி முதல், மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை 27,000 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்காவில் அதிகம் காணப்பட்ட இந்த குரங்கு காய்ச்சல் அண்டை நாடுகளுக்கும் பரவியது. உலக அளவில் பெருந்தொற்றாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குரங்கு காய்ச்சல் பரவலை கவலை அளிக்கக்கூடிய பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலக நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா தலைமையிலான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது, குரங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-

தற்போது நாட்டில் யாருக்கும் குரங்கு காய்ச்சல் அறிகுறி இல்லை. இருப்பினும், நிலைமையை சுகாதார அமைச்சகம் கவனித்து வருகிறது. எந்த நேரத்திலும் பரவல் அதிகரிக்கும் என்பதால், அதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்லைப் பகுதியில் சோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துறைமுகம், விமான நிலையங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்