மனிதர்களை போல மாடுகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்த கிராம மக்கள்...!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பசுக்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

Update: 2023-03-28 13:33 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் லடேஹர் அருகிலுள்ள சக்லா பஞ்சாயத்துக்கு உட்பட்ட துரிசோத் உள்ளிட்ட12 கிராமங்களில் உள்ள பசுக்கள், கறவை எருமை மாடுகளுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்கும் பழக்கம் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது.

மாடுகளை தினந்தோறும் வேலை வாங்குவதாலும், பால் கறப்பதாலும் அவை சோர்ந்து விடுகின்றன. இதனால் அவற்றுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை அளித்து வருவதாக கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

துரிசோத் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கஞ்சு கூறும்போது, "எங்கள் ஊரைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் மாடுகளுக்கு வாரம் ஒருநாள் ஓய்வு அளிக்கும் பழக்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. பழங்குடி மக்கள் வியாழக்கிழமைகளுக்கு மாடுகளுக்கு ஓய்வு தருகின்றனர். அதைப் போல் பழங்குடி அல்லாத மற்ற பிரிவினர் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓய்வு தருகின்றனர்'' என்றார்.

ஹெத்-போச்ரா பஞ்சாயத்தை சேர்ந்த முன்னாள் தலைவர் ராமேஷ்வர் சிங் கூறும்போது, "ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கள் எருது, பசுக்களை வேலை வாங்குவதில்லை. எத்தனை அவசரமான வேலையாக இருந்தாலும் அவற்றை விடுமுறை நாளில் வேலை வாங்குவதை பாவமாக கருதுகிறோம்.

மாடுகளை தொடர்ந்து நாள்தோறும் வேலை வாங்குவதால் அவை சோர்வடைகின்றன. அப்படி தினமும் வேலை வாங்கப்பட்ட காளை மாடு ஒன்று வயலில் உழுது கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்து இறந்தது எங்கள் மனதை பாதித்து விட்டது. மாடுகளுக்கு ஓய்வு கொடுக்காமல் வேலை வாங்குவதால்தான் இப்படியொரு சம்பவம் நடந்து விட்டதாக கருதி கிராமத்தை சேர்ந்தவர்கள் பசுமாடு, காளை மாடு, எருமை மாடுகளுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு அளித்து வருகின்றனர்.

இந்த பழக்கம் அருகிலுள்ள கிராமங்களுக்கும் பரவியது. தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 கிராமங்களில் மாடுகளுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளித்து ஓய்வு வழங்கப்படுகிறது" என்றார்.

இத்தகவலை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்