ரெயில் நிலைய மறுசீரமைப்பு என்ற பெயரில் டிக்கெட் விலையை உயர்த்தவில்லை - ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
சாமானியர்களின் வாழ்க்கையை உயர்த்த பிரதமர் மோடி உழைத்து வருகிறார் என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்களை உலக தரத்தில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி 'அம்ரித் பாரத்' ரெயில் நிலையங்கள் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட இருக்கின்றன. அதே நேரத்தில் இந்த ரெயில் நிலையங்கள் புதுப்பொலிவும் பெறப் போகின்றன.
அந்த வகையில் இந்தியா முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன. தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட 25 ரெயில் நிலையங்களும் இந்த திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள 508 ரெயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில் ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்புக்காக டிக்கெட் விலை எதுவும் உயர்த்தப்படவில்லை என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சாமானியர்களின் வாழ்க்கையை உயர்த்த பிரதமர் மோடி உழைத்து வருகிறார். ரெயில் நிலைய மறுசீரமைப்பின் நோக்கமும் இதுதான்.
எந்தவித சுமையும் இல்லாமல் மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையங்கள் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ரெயில் நிலைய மறுசீரமைப்பு என்ற பெயரில் நாங்கள் கட்டணம் எதுவும் நிர்ணயிக்கவில்லை, டிக்கெட் விலையையும் உயர்த்தவில்லை" என்று தெரிவித்தார்.