பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை பணிகளில் ஊழல் நடைபெறவில்லை; மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி
பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை பணிகளில் ஊழல் நடைபெறவில்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
ஊழல் நடக்கவில்லை
பெங்களூருவில் மத்திய மந்திரி நிதின் கட்காரி நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு-மைசூரு இடையே அமைக்கப்பட்டுள்ள 10 வழிச்சாலையில் சமீபத்தில் பெய்த மழையால் ராமநகர் மாவட்டத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானாா்கள். பெங்களூரு-மைசூரு சாலை அமைத்ததில் சில தவறுகள் நடந்திருப்பது உண்மை தான். ஆனால் இந்த சாலை அமைத்ததில் எந்த விதமான ஊழலும் நடைபெறவில்லை.
நான் 8 ஆண்டுகளாக மந்திரியாக இருந்து வருகிறேன். இதுவரை ரூ.50 லட்சம் கோடிக்கான திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். இதுவரை எந்த ஒரு திட்டத்திலும் ஊழல் நடந்ததில்லை. நான் மத்திய மந்திரியாக இருப்பது பணம் சம்பாதிக்க இல்லை.
வரலாறு காணாத மழை
பணம் சம்பாதிக்க வேறு தொழில்கள் உள்ளது. மத்திய மந்திரிசபையில் எந்த ஒரு திட்டத்திலும் ஊழல் நடந்ததில்லை. கர்நாடகத்தில் ஊழல் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறி வருவது பற்றி நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். கர்நாடகத்தை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
பெங்களூரு-மைசூரு சாலையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்படும். அங்கு நடந்திருக்கும் தவறுகள் சரி செய்யப்படும். 75 ஆண்டுக்கு பின்பு வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையும் அந்த சாலையில் தண்ணீர் தேங்குவதற்கு ஒரு காரணமாகும். கூடிய விரைவில் பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.