"தேர்தலின்போது எந்த கட்சிக்கும் பிரச்சனை ஏற்படுத்த விரும்பவில்லை"- வருமான வரித்துறை விளக்கம்

வருமான வரித்துறையின் அபராதத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

Update: 2024-04-01 07:41 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி கடந்த 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக கூறி, அந்த கட்சியின் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.

மேலும் அபராதமாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை எடுத்துக்கொண்டது.

இதனிடையே கடந்த 2014-15 முதல் 2020-21 வரையிலான 7 நிதியாண்டுகளுக்கான காங்கிரசின் வருமானவரி கணக்குகளை வருமானவரித்துறை மறுமதிப்பீடு செய்தது. இதில், வருமானவரி கணக்கில் நிலவும் முரண்பாடுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை மொத்தமாக ரூ.3,567 கோடி அபராதம் விதித்தது.

நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, வருமான வரித்துறையின் இத்தகைய நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மக்களவைத் தேர்தல் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது என தெரிவித்தார்.

தேர்தலின்போது எந்த கட்சிக்கும் பிரச்சனை ஏற்படுத்த விரும்பவில்லை என்றும், காங்கிரசிடம் இருந்து ரூ.3,500 கோடியை வசூலிக்க எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் தற்போது எடுக்க மாட்டோம் என்றும் வருமான வரித்துறை தெரிவித்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்றும், தற்போது பாதகமான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்