நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராக கூட முடியாது; சுஷில் மோடி காட்டம்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தனது வாழ்வில் ஒரு போதும் பிரதமராக முடியாது என சுஷில் மோடி கூறியுள்ளார்.

Update: 2022-09-03 13:39 GMT



பாட்னா,



பீகாரில் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதாதளம் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். மணிப்பூரில் அக்கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் நேற்று இணைந்தனர். இது கட்சியில் சர்ச்சை ஏற்படுத்தியது.

பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது என்றும் பணபலத்தினால், எம்.எல்.ஏ.க்களை இழுத்து கொள்கின்றனர் என்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜீவ் ரஞ்சன் லல்லன் சிங் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

பிரதமருக்கு, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதே ஊழல்தான். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும். 2023-ம் ஆண்டில் தேசிய கட்சியாக நாங்கள் உருவெடுப்போம் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், ஊழல் மற்றும் நேர்மைக்கான விளக்கம் பிரதமர் மோடியால் மாற்றப்படுகிறது. ஊழல் செய்த நபர் பா.ஜ.க.வில் இணைந்து விட்டால், பின்னர் அவர் தூய்மையானவர் ஆகி விடுவார். பிரதமரால் பணபலம் பயன்படுத்தப்படும்போது, அது நேர்மையான ஒன்று. எதிர்க்கட்சிகள் அந்த தளத்திற்கு வரும்போது, பின்னர் அது ஊழல் என்றாகி விடும் என லல்லன் கூறியுள்ளார்.

லல்லன் கூறும்போது, அருணாசல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மணிப்பூரில் பா.ஜ.க.வை வீழ்த்தி ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

எங்களை தடுத்து நிறுத்த எவ்வளவு போராடினாலும் கவலையில்லை. 2023-ம் ஆண்டில் நாங்கள் தேசிய கட்சியாக உருவெடுப்போம் என அவர் கூறியுள்ளார்.

இந்த சூழலில், நிதிஷ் குமார் வரும் 5-ந்தேதி டெல்லி செல்கிறார். இந்த டெல்லி பயணத்தின் போது ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரையும் சந்திக்க உள்ளார். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் நிதிஷ் குமார் சந்திக்க உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன. பீகாரில் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு நிதிஷ் குமார் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற மேலவை எம்.பி. மற்றும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான சுஷில் குமார் மோடி இன்று கூறும்போது, பீகாரில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தளம், பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியை உடைக்கும். ஐக்கிய ஜனதா தள கட்சியிடம் இருந்து, அருணாசல பிரதேசம் மற்றும் மணிப்பூர் விடுபட்டு விட்டது என கூறியுள்ளார்.

தேசிய கட்சியாக மாறும் நோக்கம் அவர்களிடம் இருந்தது. முன்பு 3 மாநிலங்களில் அவர்கள் இருந்தனர். தற்போது, பீகாரில் மட்டுமே ஆட்சியில் உள்ளனர். அதனால், அவர்களால் தேசிய கட்சியாக முடியாது என கூறியுள்ளார். நிதிஷ் குமார் தனது வாழ்வில் ஒரு போதும் பிரதமராக முடியாது. அவரால் பிரதமர் வேட்பாளராக கூட முடியாது என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்