'நிபா' வைரஸ் எதிரொலி மைசூரு-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

‘நிபா’ வைரஸ் எதிரொலியால் மைசூரு-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜேந்திர பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-09-14 18:45 GMT

மைசூரு

'நிபா' வைரஸ்

கேரளாவில் 'நிபா' வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. இந்தநிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்வது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நிபா வைரஸ் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநில எல்லையை ஓட்டியுள்ள கர்நாடக பகுதிகளில் தீவிர கண்காணிப்பு, சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் மைசூரு கலெக்டர் அலுவலகத்தில் நிபா வைரஸ், மற்றும் வறட்சி இடங்களை அறிவிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார்.

முன்எச்சரிக்கை நடவடிக்கை

இதில், அனைத்து அரசுத்துைற அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத் பேசுகையில், கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநில எல்லை பகுதியான நஞ்சன்கூடு, எச்.டி.கோட்டை ஆகிய பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் நடத்த வேண்டும்.

கேரளாவில் இருந்து வருபவர்களை சோதனை சாவடிகளில் தீவிர பரிசோதனை செய்த பின்னரே மைசூரு மாவட்டத்திற்கு உள்ளே அனுமதிக்க வேண்டும். தலைவலி, காய்ச்சல், உடல் வலி போன்ற பிரச்சினைகளுடன் வருபவர்களை அதிகாரிகள் அனுமதிக்க கூடாது. பறவைகள் கடித்து வீசி இருக்கும் பழங்களை தின்ன கூடாது.

விழிப்புணர்வு

மேலும் பொதுமக்கள் வாங்கும் பழங்களை கழுவி விட்டு சாப்பிடவேண்டும். நிபா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு, அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தனியார் கிளினிக்குகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். சிலர் படிக்காமலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்கள்.

இதன் மூலம் மனித உயிர் இழப்பு ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கிராமங்களுக்கு சென்று கர்ப்பிணிக்கு அரசு சலுகைகள் மற்றும் மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும்.

தற்கொலை செய்து கொண்டுள்ள விவசாயிகளின் குடும்பத்தினர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதன் மூலமாக ஒரு வாரத்திற்குள் அவர்களது குடும்பத்தினருக்கு அதிகாரிகள் சுகாதார அட்டை வழங்க வேண்டும்.

வறட்சி பகுதி

மைசூரு மாவட்டத்தில் கே.ஆர்.நகர் தாலுகாவை தவிர மற்ற தாலுகாக்கள் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குடிநீர் வசதி பற்றாக்குறை உள்ள கிராமங்களுக்கு அதிகாரிகள் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்