பயங்கரவாதி ஷாரிக்கை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. முடிவு

குக்கர் குண்டுவெடிப்பில் காயமடைந்த பயங்கரவாதி ஷாரிக் பூரண குணமடைந்துள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டுள்ளது.

Update: 2023-01-28 22:50 GMT

குக்கர் குண்டுவெடிப்பு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நாகுரி பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் மற்றும் பயங்கரவாதி ஷாரிக் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையே தான், மங்களூருவில் பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்ற குக்கர் குண்டை ஆட்டோவில் எடுத்து சென்றபோது அது வெடித்து பலத்த காயம் அடைந்தது தெரியவந்தது. இந்த நிலையில் ஷாரிக்கின் செல்போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர் பயங்கரவாத அமைப்பை நிறுவ திட்டமிட்டு ஏராளமான ஆட்களையும் சேர்த்துள்ளார்.

3 பிரிவுகளின் கீழ்

ஷாரிக், கேரளாவில் ஆலுவா, கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் 8 இடங்களில் தங்கி இருந்ததும், அங்கு அவருக்கு பண உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கிடைத்ததும் தெரியவந்தது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பயங்கரவாதி ஷாரிக், பெங்களூருவில் உள்ள விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ஷாரிக் பூரண குணமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பயங்கரவாதி ஷாரிக்கை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விசாரணையில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்