மணக்கோலத்தில் வாக்களித்த புதுமண ஜோடிகள்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மணக்கோலத்தில் புதுமண ஜோடிகள் வாக்களித்தனர்.

Update: 2023-05-10 20:46 GMT

பெங்களூரு:-

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், நகரப்பகுதியில் வசிக்கும் வாலிபர்கள் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். இதனால் நகரப்பகுதியில் வாக்குகள் குறைந்த அளவே பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் வாக்காளிக்காமல் இருப்பவர்களுக்கு முன்னுதாரணமாக மாற்றுத்திறனாளிகளும், முதியவர்களும் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். புதுமண தம்பதிகள், திருமண முடிந்த கையோடு மணக்கோலத்துடன் வந்து ஓட்டுப்போட்டனர்.

மணக்கோலத்தில் வாக்களித்தனர்

மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணாவில் உள்ள வாக்குச்சாவடியில் புதுமண தம்பதி பிபின்-அக்ஷதா ஆகியோர் ஓட்டுப்போட்டனர். அவர்களுடன் பிபினின் தந்தை நாகேந்திரா, தாய் கீதா உள்பட 3 பேரும் வந்து

வாக்களித்தனர். பெங்களூரு யஷ்வந்தபுரம் தொகுதிக்கு உட்பட்ட நாகதேவனஹள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் புதுமண தம்பதி கிரண்-ஹர்ஷிதா ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா மாகோனஹள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் மணப்பெண் முன்னமதுமா திருமணத்திற்கு முன்பு வந்து ஓட்டு போட்டுவிட்டு திருமண மண்டபத்திற்கு சென்றார்.

இதேபோல் உடுப்பி மாவட்டம் காபுவில் கிறிஸ்தவ பெண் ஒருவர் மணக்கோலத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். பின்னர் அவர் திருமண மண்டபத்துக்கு சென்று மணம் முடித்து கொண்டார்.

மேலும் பீதர் டவுன் பழைய நவதாகி பகுதியை சேர்ந்த மணமகன் ஒருவர் மணக்கோலத்தில் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்