நேபாள நாடாளுமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு: அரசியல் கட்சிகள் பலப்பரீட்சை
நேபாளத்தில் நேற்று விறுவிறுப்பாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 61 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
காத்மாண்டு,
அண்டை நாடான நேபாளத்தில் நீண்டகாலமாகவே அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவுகிறது. அங்கு கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து எந்தவொரு பிரதமரும் முழு பதவிக்காலம் பணியாற்றவில்லை. இந்த நிலையில் 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதோடு 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது.
உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற 1.79 கோடி வாக்காளர்களுக்காக நாடு முழுவதும் 22 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
விறுவிறு வாக்குப்பதிவு
மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதாகவும் மதியம் 2 மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாகவும் உள்துறை மந்திரி பினோத் பிரகாஷ் சிங் தெரிவித்தார்.
மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதை தொடர்ந்து உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. எனவே இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இறுதி முடிவுகளை அடுத்த 8 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவீத ஓட்டுகள் பதிவானதாக நேபாள தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இரு கூட்டணிகள் பலப்பரீட்சை
நாடாளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதேபோல் மொத்தமுள்ள 550 சட்டசபை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 8-ந் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் தூபாவின் ஆளும் நேபாள காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக மற்றும் இடதுசாரி கூட்டணிக்கும், முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்டு கட்சி (யூ.எம்.எல்) தலைமையிலான இடதுசாரி மற்றும் இந்து சார்பு கூட்டணிக்கும் இடையே பலப்பரீட்சை நிலவுகிறது.
தொங்கு நாடாளுமன்றம் அமையலாம்
அதே சமயம் முன்னாள் பிரதமரான புஷ்ப கமல் தஹல் பிரசந்தாவின் நேபாள கம்யூனிஸ்டு (எம்) கட்சியும் முக்கிய போட்டியாளராக களத்தில் உள்ளது.
ஆளும் நேபாள காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் என்றும், போதுமான அரசியல் ஸ்திரதன்மையை வழங்க வாய்ப்பில்லாத அரசு அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.